கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – பெர்சே 4.0 பேரணியை அனுமதிக்க இயலாது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பான அறிவிப்பை கூட இதுவரை காவல்துறையிடம் அளிக்கவில்லை என கோலாலம்பூர் நகர காவல்துறை தலைவர் டத்தோ தாஜுடின் முகமட் ஈசா தெரிவித்தார்.
“தற்போது டத்தாரான் மெர்டேக்காவிலோ அல்லது பாடாங் மெர்போக்கிலோ அவர்கள் கூடுவதற்கு பண்டாராயா அனுமதிக்கவில்லை. பேரணி நடத்துவதற்கு வேறு எந்த இடத்தையும் பரிந்துரைக்க இயலாது என்பதால் பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது. எனவே ஏற்பாட்டாளர்களை டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்திற்கு அழைத்து, பேரணியை நடத்த வேண்டாம் என அறிவுறுத்த உள்ளோம்,” என்று டத்தோ தாஜுடின் புதன்கிழமை கூறினார்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டத்தாரான் மெர்டேக்காவிலோ அல்லது பாடாங் மெர்போக்கிலோ இப்பேரணியை நடத்த அதன் ஏற்பாட்டாளர்களான பெர்சே 2.0 திட்டமிட்டிருந்தனர்.
அன்றைய தேதியில் அக்குறிப்பிட்ட இடங்களில் வேறு எந்த நிகழ்வும் நடைபெறவில்லை என தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.