Home Featured நாடு 5 பேரின் மஇகா உறுப்பிய இழப்பு குறித்து பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திடம் புகார்!

5 பேரின் மஇகா உறுப்பிய இழப்பு குறித்து பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திடம் புகார்!

586
0
SHARE
Ad

MICபுத்ரா ஜெயா – நாளை மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் வேளையில், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் ஆதரவாளர்கள் குழு நேற்று புத்ரா ஜெயாவிலுள்ள சங்கப் பதிவகத்திற்கு சென்று, தங்களின் புகார்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

குறிப்பாக, பழனிவேல் உள்ளிட்ட ஐந்து பேர், மஇகா அமைப்பு விதி 91இன்படி  மஇகாவின் உறுப்பியத்தை இழந்துள்ளதாக வெளியிடப்படும் தகவல்கள் குறித்து தங்களின் கடுமையான ஆட்சேபங்களை வெளிப்படுத்தினர்.

தங்களின் புகார்கள் குறித்து உடனடியான பதில்கள் வேண்டும் என்றும் சங்கப் பதிவக அதிகாரிகளிடம் இந்தக் குழுவினர் வாதிட்டனர்.

#TamilSchoolmychoice

டான்ஸ்ரீ இராமசாமி (படம்), கே.பி.சாமி, ஏ.கே.இராமலிங்கம், எம்.எம்.சாமி (ஜோகூர்) ஆகியோர் உட்பட பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் பலர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

Ramasamy Tan Sriபழனிவேல் தரப்பினரின் இந்த சங்கப் பதிவக சந்திப்புக் கூட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளிகள் (வீடியோ) நட்பு ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் சந்திப்புக் கூட்டத்தின்போது, சங்கப் பதிவக அதிகாரிகளுடன் கடுமையான வாதங்களும், சர்ச்சைகளும் இடம் பெற்றது இந்தக் காணொளிகளின் மூலம் தெரிகின்றது.

இதற்கிடையில் பழனிவேல் தரப்பினரின் நேற்றைய ஆட்சேபங்களைத் தொடர்ந்து, அவர்களுக்கு இன்று பிற்பகலில் விளக்கமளிக்க சங்கப் பதிவக அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளதாக டான்ஸ்ரீ இராமசாமி கூறியதாக, தமிழ் நாளிதழ் ஒன்றின் இன்றைய செய்தி தெரிவிக்கின்றது.

ஏற்கனவே தேசியத் தலைவராகிவிட்ட பழனிவேல்!

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த மஇகா வட்டாரங்கள், பழனிவேல் தரப்பினரின் ஆட்சேபங்கள் அவர்களின் நிலைப்பாடு குறித்து அவர்களுக்கே குழப்பங்கள் ஏற்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

Palanivelகாரணம், கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, தங்களின் மஇகாதான் அதிகாரபூர்வ மஇகா என்று கூறிக் கொண்டு, தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலை பழனிவேல் தரப்பினர் நடத்தி முடித்துவிட்டனர். அந்தத் தேர்தலின்படி பழனிவேல்தான் அதிகாரபூர்வ தேசியத் தலைவர் என்றும் அறிவித்து விட்டனர்.

எனவே, அதே அடிப்படையில் செயல்பட்டு, தாங்கள்தான் அதிகாரபூர்வ மஇகா என்பதை தொடர்ந்து நிரூபிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இப்போது அதை சௌகரியமாக அவர்களே மறந்து விட்டு, அவர்கள் செய்த முடிவுக்கு நேர் எதிராக, பழனிவேல் மஇகா உறுப்பினர் இல்லை என்று ஒரு தரப்பினர் சொல்கின்றார்கள் என்று சங்கப் பதிவகத்திடம் இப்போது ஆட்சேபம் தெரிவிக்கின்றார்கள்.

இத்தகைய முரண்பாடுகளினால், பழனிவேல் தரப்பினரின் உண்மையான நிலைப்பாடு, நோக்கம் என்ன என்பது குறித்து குழப்பமே ஏற்படுவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.