Home கலை உலகம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு நிரந்தரத் தடை!

இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு நிரந்தரத் தடை!

611
0
SHARE
Ad

ilayarajaசென்னை, ஆகஸ்ட் 20 – இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை எக்கோ ரெக்கார்டிங், அகி மியூசிக் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்துள்ளது.

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை பெறாத நிறுவனங்கள் சில, கடந்த சில வருடங்களாக அப்பாடல்களைப் பயன்படுத்தி வர்த்தக ரீதியாக இலாபம் ஈட்டி வந்தன. இது தொடர்பாக பல முறை எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டு வந்த இளையராஜா, சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் இளையராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், “நான் மெட்டு அமைத்த திரைப்படப் பாடல்களின் ஒலிபரப்பு விற்பனை உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் எனது அறியாமையை பயன்படுத்தி எக்கோ ரெக்கார்டிங், யுனிசிஸ், அகி மியூசிக் மற்றும் கிரி டிரேடிங் ஆகிய ஒலிநாடா மற்றும் இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் எனது பாடல்களை பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றன.”

#TamilSchoolmychoice

“காப்புரிமை பெற்ற பாடல்களையும், சில பாடல்களுக்கான காப்புரிமை காலம் காலாவதியான பின்னரும், இந்த நிறுவனங்கள் எனது பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. எனவே, மேற்கண்ட ஒலிப்பதிவு நிறுவனங்கள் எனது பாடல்களை ஒலிப்பதிவு செய்ய, பயன்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இளையராஜாவின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், அவரது பாடல்களை பயன்படுத்த மேற்கண்ட ஐந்து நிறுவனங்களுக்கும் நிரந்தர தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. தலைமை நீதிபதிகள் இருவரின் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், அந்நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.