கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மகாதீர் முயற்சிப்பது தவறான நடவடிக்கை என்றும், மக்களால் ஜனநாயக நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் என்றும் பிரதமரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நஜிப்பின் ஆதரவாளர்களை தமது அண்மைய வலைதளப் பதிவு ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார் மகாதீர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது முழுக்க முழுக்க சட்டப்படி சரியான நடவடிக்கையாகவே இருக்கும் என்றும், தற்போதுள்ள சூழ்நிலையில் இத்தகைய தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம் என்றும் மகாதீர் தமது பதிவில் கூறியுள்ளார்.
“ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது முறைகேடான செயல் என்றும் ஜனநாயக அமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் அவரும் (நஜிப்) அவரது ஆதரவாளர்களும் கூறுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சட்டவிரோதமாக தூக்கியெறிய முயற்சிப்பதாகவும் சாடுகிறார்கள். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது சட்டப்படி சரியான ஒரு நடவடிக்கை என்பது எல்லோருக்குமே தெரியும்,” என்று மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.