Home Featured நாடு “தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும் முறியடிக்கப்படும்”...

“தேசியத் தலைவர் தேர்தலில் பங்கு பெற 2,843 கிளைகள் தகுதி! – அனைத்து தடைகளும் முறியடிக்கப்படும்” – சக்திவேல்

572
0
SHARE
Ad

Sakthivel-Featureகோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மஇகா தலைமையகக் கட்டிடத்தின் முதல் மாடியில் நடைபெறவிருக்கும், மஇகா தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் சுமுகமான முறையில் செய்யப்பட்டு வருவதாக  மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல் அழகப்பன் அறிவித்துள்ளார்.

மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவையால் நியமிக்கப்பட்ட மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழு இதுவரையில் இரண்டு கூட்டங்களை நடத்தி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைக் கவனித்து வருவதாகவும், நாளைய வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பாக இன்று ஒரு கூட்டம் நடைபெறும் என்றும் சக்திவேல் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், தேசியத் தலைவர் தேர்தலுக்கான இறுதிக் கட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதும், தேசியத் தலைவர் தேர்தலுக்கான துணை விதிகள் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதும் உறுதிப்படுத்தப்படும் என்றும் நேற்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் சக்திவேல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

 “ஏற்கனவே தேர்தலை நடத்திவிட்ட குழுவினரின் தகாத செயல்”

MIC-logoதனது பத்திரிக்கை அறிக்கையில் அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுப் பாரங்கள் மஇகா தலைமையகத்தால் கிளைத் தலைவர்களுக்கும் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மஇகாவின் 9வது தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் இந்தத் மறு-தேர்தலில் இதுவரையில் 2,843 மஇகா கிளைகள் பங்கு பெறுவதற்கு தகுதி வாய்ந்தவையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் முன்னாள் தேசியத் தலைவரின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு குழுவினரும், அவரது தலைமையிலான மத்திய செயலவையினர் என்று கூறிக் கொள்பவர்களும், நாளைய தேசியத் தலைவர் வேட்புமனுத் தாக்கல் நேரத்தின் போது, இடையூறு செய்யப் போவதாகவும், அதை நிறுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாகவும், தொடர்ந்து எச்சரிக்கைகளையும், பயமுறுத்தல்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால், இதே குழுவினர்தான் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி எங்களின் மஇகாதான் அதிகாரபூர்வமானது என்று கூறிக் கொண்டு, வேட்புமனுத் தாக்கல் ஒன்றையும் நடத்தி, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் மீண்டும் தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்திருந்தனர்.

அந்த ஆகஸ்ட் 9 வேட்புமனுத் தாக்கலில் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்படாத பல மஇகா கிளைகளும் பங்கு பெற்றதாகத் தெரிகின்றது.”

சங்கப் பதிவக உத்தரவுகள் சட்டப்படி நிறைவேற்றப்படுகின்றன

MICமேற்கண்டவாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ள சக்திவேல், மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவை 13 பிப்ரவரி 2015இல் நடைபெற்ற தனது கூட்டத்தில், 6 பிப்ரவரி 2015 தேதியிட்ட கடிதத்தின் வழி சங்கப் பதிவகம் தெரிவித்துள்ள அனைத்து உத்தரவுகளையும், கோரிக்கைகளையும் ஏற்று செயல்படுத்த முடிவு செய்திருந்தது என்பதையும் வலியுறுத்தினார்.

“மஇகா 2009 மத்திய செயலவையின் இந்த முடிவை கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற கிளைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட 2.500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டு உறுதிப் படுத்தியுள்ளனர். அதே வேளையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றமும் சங்கப் பதிவகம் வெளியிட்ட கடிதங்கள் அனைத்தும் 1966ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டங்களுக்கு ஏற்ப, சங்கப் பதிவகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டுதான் வழங்கப்பட்டதாக தீர்ப்பளித்திருக்கிறது. மஇகா 2009 மத்திய செயலவை இடைக்கால மத்திய செயலவையாக சங்கப் பதிவகத்தால் அங்ககீரிக்கப்பட்டிருப்பதும் உயர் நீதிமன்றத்தால் சட்டப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றமும், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு உறுதிப்படுத்தியிருந்தது” என்றும் சக்திவேல் கூறினார்.

பொறுப்பற்ற கும்பலின் செயல்களுக்கு பலியாக வேண்டாம்

“எனவே, மஇகா 2009 மத்திய செயலவை, சட்டத்திற்குட்பட்டு தனது அனைத்து நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொண்டு வந்துள்ள நிலையில், ஒரு சிறு குழுவினர் சட்டத்தை மதிக்காமல், கட்சியின் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் நடந்து கொள்ள முற்படுவதை 2009 மத்திய செயலவை கடுமையாகக் கண்டிக்கின்றது. அந்தக் குழுவினரின் நோக்கமெல்லாம் கட்சியில் கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிக்கு களங்கத்தை, அவப் பெயரை ஏற்படுத்துவதும், மோசமான தோற்றத்தை ஏற்படுத்துவதும்தான். இந்நிலையில் தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமான முறையில் நடைபெற்று முடிவதை உறுதிப்படுத்தும் வகையில் மஇகா தலைமையகம், சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகளுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி, கட்சியின் நலன்களை பாதுகாக்க,  எல்லாவகையான முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகின்றது” என்றும் சக்திவேல் அறிவித்துள்ளார்.

இந்த பொறுப்பற்ற, இடையூறு செய்யும் கும்பலின் கூக்குரல்களையும், அறிவிப்புக்களையும் மஇகா உறுப்பினர்கள் அனைவரும் செவிமெடுக்க வேண்டாம் என்றும், அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென்றும் சக்திவேல் கேட்டுக் கொண்டார்.

இத்தகைய பொறுப்பற்ற கும்பல்களின் வார்த்தைகளை நம்பி அவர்களின் நடவடிக்கைகளில் மஇகா உறுப்பினர்கள் யாரும் பங்கு பெற வேண்டாம் என்றும் சக்திவேல் மேலும் கேட்டுக் கொண்டார்.

இந்த பொறுப்பற்ற குழுவினரின் நடவடிக்கைகள், கூட்டங்களில் கலந்து கொள்வது சட்டவிரோதமானது, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என்ற முடிவையும் மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவை ஏற்கனவே எடுத்துள்ளது என்பதையும் சக்திவேல் நினைவுபடுத்தினார்.

அவ்வாறு இந்த பொறுப்பற்ற கும்பலின் நாளைய நடவடிக்கைகளில் மஇகா உறுப்பினர்கள் பங்கு பெற்றால், அது கட்சியின் நலன்களுக்கு எதிரான செயலாகக் கருதப்படும் என்பதோடு, மஇகா அமைப்பு விதிகளுக்கேற்ப அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சக்திவேல் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.