தியான்ஜின், ஆகஸ்ட் 21 – சீனாவின் வடபகுதியில் இருக்கும் தியான்ஜின் நகரில், கடந்த 12-ம் தேதி நடைபெற்ற மிகப் பெரும் இரசாயன வெடி விபத்தில் இதுவரை 114 பேர் பலியாகி உள்ளனர். 700-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தியான்ஜின் சுற்று வட்டாரப் பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்புக் காரணங்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
‘ரூஹாய் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ்’ (Ruihai International Logistics) என்ற இரசாயன சேமிப்புக் கிடங்கில் தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்து 10 நாட்களை நெருங்கும் நிலையில், வெடி விபத்திற்கான காரணங்கள் தற்போது தான் வெளிவரத் தொடங்கி உள்ளன. குறிப்பிட்ட அந்த கிடங்கில், ‘சோடியம் சைனைட்’ (Sodium Cyanide) போன்ற மிகவும் ஆபத்தான வேதிப் பொருட்கள், பாதுகாப்பு வரம்பைத் தாண்டி பல நூறு மடங்கும் அதிகமாக சேமித்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் தியான்ஜின் நகரில் இருந்து 4 மைல்கள் தொலைவில் இருக்கும் ஏரியில், ஆயிரக்காணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்துள்ளன. உடனடியாக, அந்த தண்ணீரை பரிசோதனை செய்து பார்த்த போது, சோடியம் சைனைட்டின் செறிவு மிக அதிக அளவு இருந்துள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி தியான் வெய்யாங் கூறுகையில், “சம்பவம் நடந்த 8 இடங்களில் மனிதர்களை கொல்லக்கூடிய சோடியம் சைனைட் மிக அதிக அளவில் இருந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் 356 மடங்கு அதிகம் இருந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தியான்ஜின் சுற்றுவட்டாரப் பகுதியின் சுற்றுச் சூழல் மிகவும் அபாயகரமானதாக மாறி உள்ள நிலையில், அந்நகர அதிகாரிகள் நகரத்தின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் இந்த அறிவிப்பிற்கு, அந்நகரவாசிகள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளும், தியான்ஜின் சம்பவத்திற்கான உண்மைநிலை ஆராயுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.