புத்ராஜெயா, ஆகஸ்ட் 21 – மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை அளிக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளன.
குறிப்பாக ஜசெக இதை தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்கும் வரை, அரசியல் நன்கொடைகளை சட்டப்பூர்வமாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசி ரம்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாக்டர் சுப்ராவிடம், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “பரவாயில்லை… இது நல்ல கோரிக்கைதான்” என்றார்.
“எனினும் எனக்கு அதிகமான சொத்துக்கள் இல்லை. எனவே சொத்து விவரங்களை வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்துறை துணை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லானிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, “இதுகுறித்து பிரதமர் முடிவெடுப்பார்” என்றார்.