பாங்காக், ஆகஸ்ட் 21 – கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்ட இருவரை தாய்லாந்து காவல்துறை விசாரணை வளையத்தில் இருந்து விடுவித்துள்ளது. இருவருக்கும் குண்டு வெடிப்பில் எந்தவித தொடர்பும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் நபருக்கு அருகே இவ்விரு சந்தேக நபர்களும் நின்றிருந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இருவரில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி. மற்றொருவர் தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஆவார்.
முன்னதாக காவல்துறை தங்களை தேடுவதை அறிந்ததும் இருவரும் தாமாக முன்வந்து சரணடைந்தனர்.
இதற்கிடையே குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி இன்னும் தாய்லாந்திலேயே இருப்பதாக அந்நாட்டு காவல்துறை நம்புகிறது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சதிச் செயலில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் முக்கிய குற்றவாளி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும், தாய்லாந்து காவல்துறை கருதுவதாகத் தெரிகிறது.
அதே சமயம் குண்டு வெடிப்பில் அனைத்துலக தீவிரவாத அமைப்புகள் எதற்கும் தொடர்பு இல்லை என்று தாய்லாந்து காவல்துறை நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
“முக்கிய குற்றவாளி வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் ஆங்கிலத்தில் பேசவில்லை. வேறொரு வெளிநாட்டு மொழியில் பேசியுள்ளார். அவரைப் பற்றிய சில தகவல்களை, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அவரை அழைத்து வந்த இரு சக்கர வாகனமோட்டி ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது” என காவல்துறை ஒருவர் தெரிவித்துள்ளார்.