பாங்காக் – நேற்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், இரயில் நிலையம் ஒன்றின் அருகே, பைப் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டிருக்கின்றது. அதனை நிபுணர்கள் உதவியோடு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் தாய்லாந்து அதிகாரிகள்.
கடந்த வாரம் தான் மருத்துவமனையில் வெடிகுண்டு வெடித்து 20 பேருக்கும் மேல் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் வெடிகுண்டு அதனுடன் தொடர்புடையதாக இருக்குமா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து அந்நாட்டு தேசிய காவல்துறை ஆணையர் சாக்திப் சாய்ஜிந்தா கூறுகையில், அவ்வெடிகுண்டு தாய்லாந்து கலாச்சார மையத்தின் இரயில் நிலையத்தில் தொடர்புடையதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றோம். அது ஒருவேளை அதனுடன் தொடர்புடையது என்றால், இதை அந்த சம்பவத்தோடு ஒன்றாகக் கருதுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இதுவரை 3 முறை நகரின் முக்கிய இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அரசாங்க லாட்டரி அலுவலகத்தின் முன்பும், மே 15-ம் தேதி, தேசியத் திரையரங்கு முன்பும், மே 22-ம் தேதி மருத்துவமனையிலும் குண்டு வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.