சிங்கப்பூர், ஆகஸ்ட் 21 – சிங்கப்பூரின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய டாலர் நோட்டுகள் அடங்கிய உறைகளில் (Folders) சிங்கப்பூர் முதல் அதிபரின் பெயரை தவறாக எழுதியதற்காக அந்நாட்டு நிதி ஆணையம் (The Monetary Authority of Singapore) மன்னிப்புக் கேட்கும் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது.
சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோஃப் இசாக் என அச்சிடப்பட வேண்டிய பெயரை யூசோக் இசாக் என டாலர் நோட்டுகளின் உறைகளிலும், அதனுடன் வழங்கப்பட்ட கையேடுகளிலும் தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
எனினும், டாலர் நோட்டுகளில் எந்த ஒரு தவறும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி ஊடகமான ‘த ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன், இந்தத் தவறுக்கு தான் முழுப் பொறுப்பு ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது போன்ற ஒரு தவறு எப்போதும் நடக்கக் கூடாது. இந்தத் தவறு ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நான் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். இந்த டாலர் நோட்டுகளைத் தயாரிப்பதற்கும், உறைகளைத் தயாரிப்பதற்கும் கடுமையான உழைப்பை வழங்கிய என்னுடைய ஊழியர்கள் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த எதிர்பாராத தவறை எண்ணி நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இதை நாங்கள் சரிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தவறான எழுத்துகள் உள்ள இடங்களில் சரியான எழுத்துகள் கொண்ட புதிய ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கான வேலைகள் தற்போது நடந்துவருவதாக சிங்கப்பூர் நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.