சென்னை, ஆகஸ்ட் 21- 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைதாகித் தற்போது பிணையில் உள்ள முன்னாள் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா மீது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய்ச் சொத்துச் சேர்த்ததாக சிபிஐ புது வழக்கு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து அவரது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு ஆகிய 20 இடங்களில் நேற்று முன் தினம் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ நேற்று தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் நேற்றும் சிபிஐ தொடர்ந்து நடத்திய சோதனையில் அவரது டில்லி வீட்டில் 6 கிலோ தங்கம் ,3.2 கிலோ எடையுள்ள வைரம் பதித்த தங்க நகைகள், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதுதவிர, ராஜாவின், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இருந்த, மூன்று கிலோ தங்க நகைகள், 200 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.