Home Featured நாடு மஇகாவுக்கு இராசியில்லாத “சுப்ரமணியர்கள்”! முதன் முதலில் முறியடித்த டாக்டர் சுப்ரா!

மஇகாவுக்கு இராசியில்லாத “சுப்ரமணியர்கள்”! முதன் முதலில் முறியடித்த டாக்டர் சுப்ரா!

804
0
SHARE
Ad

Dr Subra - MIC PRESIDENTகோலாலம்பூர் – நீண்ட காலமாக மஇகாவில் செவிவழிச் செய்தியொன்று மூட நம்பிக்கையாகவோ, அனைவராலும் நம்பப்பட்ட சித்தாந்தமாகவோ, பேசப்பட்டு வந்தது.

மஇகாவுக்கும் ‘சுப்ரமணியம்’ என்ற பெயருக்கும் இராசியில்லை – அந்தப் பெயர் கொண்டவர்கள் தலைவராக முடியாமலே போய்விடுகின்றது என்ற பேச்சுத்தான் அது!

இந்தியர்களிடையே அதிகமாக வைக்கப்படும் பெயர் என்றால் அது சுப்ரமணியம் என்ற பெயர்தான். மஇகாவில் ஏராளமான சுப்ரமணியர்கள் இருந்தாலும் தலைவர்கள் என்று வரும் போது அந்தப் பெயரில் ஓரிருவர் முளைத்தாலும், அவர்களால் தலைமைத்துவ பதவியை மட்டும் அடைய முடியாமலேயே போய்விடுகின்றது என்ற சித்தாந்த நம்பிக்கை மஇகாவினரிடையே ஆழமாக வேரூன்றி இருந்தது.

#TamilSchoolmychoice

முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம்

Samy-Subraகிளைத் தலைவர்கள் அளவில் ஏராளமான சுப்ரமணியர்கள் இருந்தாலும் அந்தப் பெயர் உயர்மட்டத் தலைவர்கள் வரிசையில் இடம் பெற்றதும், அடிபடத் தொடங்கியதும் 1973ஆம் ஆண்டில்தான்.

அவர்தான் மக்கள் தலைவர் என பின்னர் அழைக்கப்பட்ட டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியம்.

1973ஆம் ஆண்டில், துன் சம்பந்தனுக்குப் பிறகு, மாணிக்கவாசகம் தேசியத் தலைவரானதும், அப்போதைய சிலாங்கூர் மாநில மஇகா செயலாளர் சாமிவேலுவைத்தான் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க,

ஆனால், அன்றைய மஇகா அலுவலகத்தின் நிர்வாகச் செயலாளராக இருந்த சி.சுப்ரமணியத்தை தலைமைச் செயலாளராக அறிவித்து, கட்சியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி, மஇகாவில் ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு வித்திட்டார் மாணிக்கவாசகம்.

தொடர்ந்து 1974ஆம் ஆண்டில், டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, துணையமைச்சர் பதவி, என சுப்ரமணியத்தை அரசியலில் வளர்த்து விட்ட மாணிக்கவாசகம், டான்ஸ்ரீ ஆதி.நாகப்பனின் அகால மரணத்தால் காலியான தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு, 1977ஆம் ஆண்டில் போட்டியிட சுப்ரமணியத்திற்கு ஆதரவளித்தார்.

Tan Sri Subraசுப்ரமணியம் (படம்) அந்தத் தேர்தலில் சாமிவேலுவிடம் தோல்வி கண்டு, பின்னர் அடுத்து 1978ஆம் ஆண்டில் டாமன்சாரா நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வி.டேவிட்டிடம் தோல்வி கண்டார்.

ஆனால், 1981ஆம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்வு பெற்று அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார் டான்ஸ்ரீ சுப்ரா.

அப்போது முதல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனது துணைத் தலைவர் பதவியைப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தக்கவைத்துக் கொண்டு வந்தார் டான்ஸ்ரீ சுப்ரமணியம்.

இந்நிலையில் சாமிவேலுவுக்குப் பின்னர் டான்ஸ்ரீ சுப்ராதான் அடுத்த மஇகா தேசியத் தலைவராகப் பார்க்கப்பட்டார்.

ஆனால், 2006ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் பழனிவேலுவிடம் துணைத் தலைவருக்கான போட்டியில் அவர் தோல்வி கண்டார்.

2009 கட்சித் தேர்தலில் மீண்டும் பழனிவேலுவை எதிர்த்த அவர், அந்தத் தேர்தலிலும் தோல்வி கண்டார்.

அப்போது முதல்தான்  மஇகாவில் ஒரு நம்பிக்கை – சித்தாந்தம் மஇகாவில் பரவத் தொடங்கியது.

Samy Vellu-Palanivel

சுப்ரமணியம் என்ற பெயர் மஇகாவுக்கு இராசியில்லை. அந்தப் பெயர் கொண்டவர்கள் மஇகாவின் தலைவராக வரமுடியாது. மாறாக, ‘வேலு’ என்ற பெயர் இராசிதான் மஇகாவுக்கு சரிப்பட்டு வருகின்றது என்பதுதான் அது.

அதற்கேற்ப, சாமி’வேலு’ 31 ஆண்டுகள் தேசியத் தலைவராக ஆட்சி செய்ய, அடுத்த தேசியத் தலைவர் வாய்ப்பு 2010இல் பழனி’வேலு’வுக்கு வாய்த்தது.

டத்தோ எஸ்.எஸ்.சுப்ரமணியம்

இடைப்பட்ட காலத்தில் இன்னொரு சுப்ரமணியம் மஇகாவில் உயர்மட்டத் தலைவர் பதவிக்கு வந்து அந்தப் பெயரில் உள்ளவர்களாலும் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றதும், பூச்சோங் வட்டாரத்தில் சமூக இயக்கங்களில் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் பணியாற்றிக் கொண்டிருந்த பொறியியலாளர் ஒருவரை கிளைத் தலைவராக்கி, அடுத்த ஓர் ஆண்டிற்குள் சிலாங்கூர் மாநிலத்தின் செயலாளராகவும் நியமித்தார். அடுத்து வந்த 1982ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் போட்டியிட அவருக்கு வாய்ப்பளித்தார்.

Dato S.S. Subramaniam

அவர்தான் டத்தோ எஸ்.எஸ்.சுப்ரமணியம் (படம்)!

சிறந்த கல்வித் தகுதிகளோடு, களையான தோற்றத்துடனும், எல்லோருடனும் கலகலப்பாக பேசிப் பழகும் தன்மையுடனும் மஇகாவில் வலம் வந்த எஸ்.எஸ்.சுப்ரமணியம் நாளடைவில் மஇகா அரசியலில் உயர்ந்த நிலையை அடைந்தார்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், டான்ஸ்ரீ மகாலிங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், 1987ஆம் ஆண்டில், சாமிவேலுவின் விருப்பத்திற்கு மாறாக, மகாலிங்கத்தை எதிர்த்து தேசிய உதவித் தலைவர் தேர்தலில் போட்டியில் குதித்தார்.

ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, டத்தோ பத்மநாபன், டத்தோ எம்.ஜி.பண்டிதன் ஆகியோருடன் அணி சேர்ந்து, மூன்றாவது உதவித் தலைவராக, 1987ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில் வெற்றி பெற்று அன்றைய மஇகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

Palanivel-Sothi-Tan Sri Subra

2009 மஇகா துணைத் தலைவர் தேர்தலில் மோதிய மூவர் – பழனிவேல், சோதிநாதன், சுப்ரா…

இருப்பினும் மீண்டும் சாமிவேலுவுடன் ஏற்பட்ட பிணக்குகளை சமரசம் செய்து கொண்ட எஸ்.எஸ்.சுப்ரமணியத்திற்கு 1990ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த சாமிவேலு, தொடர்ந்து அவரை அனைத்துலக வாணிப அமைச்சில் நாடாளுமன்றச் செயலாளராக பதவியேற்கவும் வாய்ப்பளித்தார்.

அதுவரை செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த கட்சியின் தேசியத் துணைத் தலைவரான டத்தோ சி.சுப்ரமணியத்திற்கு 1990ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வாய்ப்பளிக்காமல் அவரை ஒதுக்கி வைத்தார் சாமிவேலு.

பின்னர்  சாமிவேலு-சுப்ரமணியம் இருவரும் மீண்டும் கைகுலுக்கிக் கொண்டு, சமரசமாகிவிட, எஸ்.எஸ்.சுப்ரமணியம் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 1995 பொதுத் தேர்தலில் கழட்டி விடப்பட்டார்.

1995 பொதுத் தேர்தலில் மீண்டும் தேசியத் துணைத் தலைவர் டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியமே செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது முதல் மஇகா அரசியலில் கட்டம் கட்டமாக முக்கியத்துவம் இழந்து வந்த எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஒருமுறை தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு அப்போதைய துணைத் தலைவர் டத்தோ சி.சுப்ரமணியத்தை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியும் கண்டார்.

பின்னர் 2009ஆம் ஆண்டில், ஜூலை மாத வாக்கில், மஇகாவிலிருந்து விலகி எதிர்க்கட்சியான பிகேஆர் கட்சியில் இணைந்து கொண்டார்.

அத்துடன் மஇகாவில் மற்றொரு சுப்ரமணியத்தின் அரசியல் எதிர்காலம் முடிவடைந்தது.

டாக்டர் சுப்ராவின் நுழைவும் வளர்ச்சியும்

Subramaniam-MICஇப்படியாக, சுப்ரமணியர்கள் என்ற பெயர் கொண்டவர்கள் மஇகா தலைமைத்துவத்திற்கு இராசியில்லாதவர்கள் என்ற சித்தாந்தம் கட்சியில் வேரூன்றத் தொடங்கியிருந்த காலகட்டத்தில், 2004இல் புதிதாக மற்றொரு  சுப்ரமணியம் மஇகா அரசியலில் முளைத்தார்.

அவர்தான் இன்றைய தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்

2004ஆம் ஆண்டில், சாமிவேலுவுக்கும் டான்ஸ்ரீ சுப்ராவுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களால் மீண்டும், செகாமாட் நாடாளுமன்றத்தில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்காத சாமிவேலு, அவருக்குப் பதிலாக செகாமாட்நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்த பெயர்தான் டாக்டர் ச.சுப்ரமணியம்.

அப்போது மலாக்கா மாநிலத்தில் ஒரு மஇகா கிளைத் தலைவராக, மருத்துவத் துறையில் புகழ்பெற்ற தோல் மருத்துவ நிபுணராக, மட்டுமே இருந்த டாக்டர் சுப்ரா எப்படியோ சாமிவேலுவின் கண்ணிலும், கருத்திலும் பட்டுவிட்டார்.

2004 பொதுத் தேர்தலில் டாக்டர் சுப்ராவை செகாமாட் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ராவுக்குப் பதிலாக சாமிவேலு இன்னொரு புதிய சுப்ரமணியம் மஇகாவில் அரசியல் வெளிச்சத்துக்கு வந்தார்.

டாக்டர் சுப்ராவின் உண்மையான திறமைகள், பின்னணிகள் என்னவென்று அப்போதைக்குத் தெரியாத மஇகா வட்டாரங்களில் சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர் என்ற காரணத்தினால் மட்டுமே, டாக்டர் சுப்ரா செகாமட் தொகுதியில் முன் நிறுத்தப்படுகின்றார் எனக் கூறினார்கள்.

செகாமாட் தொகுதியும் சுப்ரமணியர்களும்

Segamat-parliament - map1982ஆம் ஆண்டில் மஇகாவுக்கு ஒதுக்கப்பட்ட செகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் அப்போது முதல் இப்போதுவரை கடந்த 7 தவணைகளாக சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர்களே – இதுவரை மூவர் – நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது மற்றொரு சுவாரசியமானத் தகவல்.

அந்த வரிசையில் 2004ஆம் ஆண்டில் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக வென்ற சுப்ரா அதே ஆண்டில் ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2008ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் செகாமாட் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட டாக்டர் சுப்ராவுக்கு இன்னொரு வகையில் அதிர்ஷ்டமோ – விதிப் பயனோ – 2008ஆம் ஆண்டில் வாய்த்தது.

அந்தப் பொதுத் தேர்தலில், தேசியத் தலைவராக இருந்த சாமிவேலு, துணைத் தலைவராக இருந்த பழனிவேலு இருவருமே நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவ, டாக்டர் சுப்ரா முழு அமைச்சரானார்.

2010இல், சாமிவேலுவின் பதவி விலகலால், பழனிவேல் இடைக்காலத்  தேசியத் தலைவராக, டாக்டர் சுப்ரா மஇகாவின் இடைக்காலத் தேசியத் துணைத் தலைவரானார்.

பழனிவேல் – சுப்ரா போராட்டம்

Subra-Palanivelஆனால், அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளிலேயே, பழனிவேல்-சுப்ரா இருவருக்கும் இடையில் தலைமைத்துவப் போராட்டம் தொடங்கிய போது,

இந்தப் போராட்டத்திலாவது டாக்டர் சுப்ரா வென்று வருவாரா – சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர்கள் மஇகா தலைமைத்துவத்தை அடைய முடியாது என்ற மூட நம்பிக்கையை முறியடிப்பாரா –  

அல்லது முந்தைய சுப்ரமணியர்களைப் போன்று மஇகா அரசியலில் இவரும் காணாமல் போவாரா – என்பது போன்ற கேள்விகள் எழத் தொடங்கின.

முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ராவின் நெருக்கமான, தீவிரமான ஆதரவாளர்களில் ஒருவர் ஒருமுறை பின்வருமாறு கூறினார்:-

“பழனிவேல்-டாக்டர் சுப்ரா போராட்டத்தின்போது, முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சுப்ராவின் தீவிர ஆதரவாளர்களான எங்களைப் போன்ற சிலர் டாக்டர் சுப்ராவை ஆதரித்தோம். அப்போதெல்லாம் ஒரு சிலர் எங்களிடம் வந்து, சுப்ரமணியம் பெயருக்கும் மஇகா தலைமைத்துவத்திற்கும் இராசியில்லை. வேண்டுமானால் பாருங்கள் இந்தப் போராட்டத்தில் பழனிவேலுவுக்கு எதிராக டாக்டர் சுப்ரா தோல்வியடைவார் என்று கூறினார்கள். டாக்டர் சுப்ராவின் செயல்பாடுகள், பழக்கவழக்கங்கள், தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் தீவிரப்போராட்டம் நடத்தி வந்த கால கட்டத்தில் இதுபோன்ற எதிர்மறையான கருத்துகள் எங்களை சில சமயங்களில் சோர்வடையச் செய்தன என்பது உண்மைதான். நாங்களும் இந்த ‘சுப்ரமணியம்’ மூட நம்பிக்கை சித்தாந்தம் உண்மைதானோ என நம்பும்படியான சில சம்பவங்களும் இடையிடையே அரங்கேறின. ஆனால், நல்ல வேளையாக அதையெல்லாம் முறியடிக்கும் வண்ணம் ஆகஸ்ட் 21ஆம் தேதி டாக்டர் சுப்ரா தேசியத் தலைவராக எந்தவித தங்கு தடையுமின்றி தேசியத் தலைவராகப் பதவியேற்று, சுப்ரமணியம் பெயருக்கும் மஇகாவுக்கும் இராசியில்லை என்ற சித்தாந்தத்தை முறியடித்தார்” என்று கூறினார்.

ஆம். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி டாக்டர் ச.சுப்ரமணியம் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தில்,

மஇகாவில் சுப்ரமணியம் பெயர் கொண்டவர்கள் தலைமைத்துவப் பதவிக்கு வர முடியாது என்ற பேச்சும் – அதுவரை நிலவி வந்த மூட நம்பிக்கையும் ஒரு சேர முறியடிக்கப்பட்டது.

-இரா.முத்தரசன்