ஜார்ஜ் டவுன் – பினாங்கில் மெர்டேக்கா கொண்டாட்டத்திற்கு “Bersih, Cekap, Amanah (BCA)” என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்த மாநில அரசாங்கம் தற்போது அதிலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்தக் கருப்பொருள் காரணமாக ஆயுதப்படைகள் கொண்டாட்டத்தில் பின்வாங்குவதாக அறிவித்ததால், தாங்கள் கருப்பொருளை மறுபரிசீலனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
மெர்டேக்கா தினம் அன்று சுல்தான் யாங் டி பெர்துவா நெகிரி துன் அப்துல் ரஹ்மான் அப்பாசுக்கு ( Yang di-Pertua Negri Tun Abdul Rahman Abbas) ஆயுதப்படைகள் வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்துவது தான் வழக்கத்தில் இருந்து வருகின்றது.
எனவே, கூட்டரசு அரசாங்கத்தின் “Sehati, Sejiwa” (ஒரே மனம், ஒரே உயிர்) என்ற கருப்பொருளையே தாங்கள் பின்பற்றப் போவதாகவும் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.