சென்னை- ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதன்முதலாகத் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்குக் கூடியது.
அவைக்கு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவைத் தலைவர் தனபால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மேலும் அதிமுக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்க் கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்று அழைத்துச் சென்றார்.
அவை கூடியதும், தனபால் சபையைத் துவக்கி வைத்து உரையாற்றினார். தனது உரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குக் கவிதை வடிவில் புகழாரம் சூட்டினார்.
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வினாலும் . . .
சதி சூழ்ந்த
சக்கர வியூகத்தில் வீழ்ந்திட
மாண்புமிகு அம்மா அவர்கள் ஒன்றும்
அபிமன்யு அல்லவே?
சக்கரத்தையே கையில் சுழலவிட்டு
சதிகளைச்
சம்ஹாரம் செய்கின்ற
மகாவிஷ்ணுவின்
மனித வடிவமன்றோ
மாண்புமிகு அம்மா அவர்கள்!” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
பிறகு, மறைந்த அப்துல் கலாம் மற்றும் செந்தூர் பாண்டியன், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
அவையின் தொடக்கத்தில் சபாநாயகர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதற்குத் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஜெயலலிதாவை வாழ்த்திச் சபாநாயகர் பேசுகிறார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கரவொலி எழுப்புகின்றனர். சட்டப்பேரவை கூடிய முதல் நாளே அவை ஜெயலலிதா புகழ்பாடும் மன்றமாக இருந்ததால் கூட்டத்தொடரின் மற்ற நாட்கள் எப்படி நடைபெறும் என்பதைத் தெளிவாகக் கணிக்க முடிகிறது.
எனவே, நிகழ்ச்சி நிரலை மீறி அவையில் முதல் நிகழ்வாக ஜெயலலிதா ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததைத் திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.” எனக் கூறினார்.