Home இந்தியா மீண்டும் சூடுபிடிக்கிறது 2 ஜி விவகாரம்: சிபிஐ வலையில் கருணாநிதி உதவியாளர்!

மீண்டும் சூடுபிடிக்கிறது 2 ஜி விவகாரம்: சிபிஐ வலையில் கருணாநிதி உதவியாளர்!

678
0
SHARE
Ad

karunanithi-and-shanmuganathanபுது டெல்லி – 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார், தொழில்அதிபர் சாஹித் பல்வா உட்பட, பலர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.

2ஜி ஊழலில் தொடர்புடைய தொகையில், 200 கோடி ரூபாய், கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாற்றப்பட்டது தொடர்பாக, தமிழகத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன. சர்ச்சைகளின் உச்சகட்டமாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், இந்தப் பிரச்னை தொடர்பாக சரத்குமார், கனிமொழி, கருணாநிதி உதவியாளர் சண்முகநாதன்(படம்) ஆகியோருடன் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பேசியதற்கான தொலைபேசி உரையாடல் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தினார்.

அவர்களின் உரையாடலின் மூலம், ஊழலில் தொடர்புடையவர்கள், அது தொடர்பான ஆவணங்களை மறைக்கவும், அழிக்கவும் முயற்சிப்பது தெரிய வந்தது. அதனால், ஆவணங்களை அழிக்க முயற்சித்தவர்கள் மீது, தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ, உச்ச நீதிமன்றத்திடம் கோரியிருந்தது. உச்ச நீதிமன்றமும், அதை ஏற்று விசாரணைக்கு உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

தனி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தான், சிபிஐ சண்முகநாதன் மீது தங்களது பார்வையை திருப்பி உள்ளனர். தொலைபேசி உரையாடலில் சண்முகநாதனும் ஈடுபட்டு  இருப்பதால், அதன் உண்மைத் தன்மையை  கண்டறிய அவரை நேரில் அழைத்து பரிசோதிக்க இருக்கிறது. அவரது குரலை பதிவு செய்து, தொலைபேசி உரையாடலுடன் ஒப்பிட்டு பார்க்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், “விசாரணைக்காக சண்முகநாதனை, நேரில் வரும்படி அழைத்தோம். ஆனால், அவர் தனது வழக்கறிஞரிடம் பேசும்படி தெரிவித்துவிட்டார். எனவே, நாங்கள் அடுத்தகட்டமாக அவருக்கு நீதிமன்ற வரவழப்பை அனுப்ப உள்ளோம்” என்று தெரிவித்துள்ளன.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், திமுகவிற்கு 2ஜி வாயிலாக மீண்டும் தலைவலி தொடங்க இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.