மாசாய் – ஜோகூர் மாநிலத்தின் மாசாய் நகரிலுள்ள குழுவகத் தமிழ்ப்பள்ளியின் 11 வது தமிழ்மொழி வாரம் கடந்த 16ஆம் திகதி ஆகஸ்டு மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்கு மிக விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் துவக்க விழா கடந்த 16 ஆம் திகதி ஞாயிறு காலை பள்ளி மண்டபத்தில் செவ்வனவே அரங்கேறியது.
தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் குறுகிய காலத்தில் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியைக் கண்டு நெகிழ்ந்து போனார். செப்டம்பர் மாதம் பணி ஓய்வுப் பெறவுள்ள தலைமையாசிரியரின் நிறைவு நிகழ்வான இத்தமிழ்மொழி வாரமானது கடந்த எட்டு ஆண்டுகளைக் காட்டிலும் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
பல தமிழ் ஆர்வலர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை உயர்திரு முத்து நெடுமாறன் சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வத் திறப்பு செய்தார். கலந்துரையாடல் பாணியில் அமைந்த அவரது உரையில் தமிழின் மாண்புகளை எடுத்துரைத்ததோடு அகில உலக அரங்கில் தமக்கென தனியொரு இடத்தை ஏற்படுத்தியது தமிழ் ஒன்றே எனப் புகழாரம் சூட்டினார்.
பின்னர், முத்து நெடுமாறன் மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளியின் அருந்தமிழ் அருவி எனும் முற்றிலும் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பரைசாற்றும் காட்சியகத்தினை அதிகாரப்பூர்வத் திறப்புச் செய்தார்.
-செய்தி, படங்கள் குமாரி சிவசங்கரி