Home Featured நாடு உலகமெங்கும் முக்கிய நகரங்களில் பெர்சே 4.0 பேரணி!

உலகமெங்கும் முக்கிய நகரங்களில் பெர்சே 4.0 பேரணி!

514
0
SHARE
Ad

bersih-4.0 -logo -கோலாலம்பூர் – நாடும் தலைநகர் கோலாலம்பூரும் பெர்சே 4.0 பேரணிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் பல முக்கிய நகரங்களிலும் பெர்சே பேரணி அங்குள்ள மலேசியர்களால் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பேஸ்புக் பக்கங்கள் தொடங்கப்பட்டு, பேரணி தொடர்பான அறிவிப்புகள் அந்தப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நகருக்கும் ஒரு பேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில், ஆறு நகரங்களிலும், அமெரிக்காவில் 9 நகர்களிலும் பெர்சே 4.0 பேரணி உள்ளூர் நேரப்படி நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ, பிரான்ஸ் நாட்டில் பாரிஸ், பிரிட்டனில் இலண்டன் ஆகிய நகர்களிலும் கூடவிருக்கும் பெர்சே பேரணி, ஜெர்மனியில் ஹேம்பர்க் மற்றும் ஹாங்காங் நகர்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

Bersih 4-Logoசிங்கப்பூரில், பெர்சே பேரணி நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கலந்து கொள்ள விரும்புபவர்கள் சிங்கப்பூரிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெர்சே 4.0 சிறப்பு பேருந்துகளின் மூலம் கோலாலம்பூர் வந்து, பேரணியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சீனாவிலும், சூசௌ (Suzhou) என்ற நகரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பகிரங்க அறிவிப்பு விடுக்கப்படவில்லை என்றும் விரும்புபவர்கள் ஒரு குறிப்பிட்ட இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணிகளில் கலந்து கொள்பவர்கள் மலேசியக் கொடி, பெர்சே வாசகங்கள் அடங்கிய பதாகைகள், புகைப்படக் கருவிகள் (கேமரா) ஆகியவற்றை உடன் கொண்டு வரலாம் என்றும், மஞ்சள் ஆடைகள் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அயர்லாந்தின் டப்ளின் நகர், இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தா, ஜப்பான் தலைநகர் தோக்கியோ, பிலிப்பைன்சின் தலைநகர் மணிலா, தென்கொரியாவின் பூசான் நகர், ஸ்காட்லாந்தில் எடின்பரா நகர், சுவீடனில் ஸ்டோக்ஹோம் நகர் ஆகிய நகர்களிலும் பெர்சே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மட்டும் மூன்று நகர்களில் நடைபெறும் பெர்சே பேரணி, சுவிட்சர்லாந்தில் இரண்டு நகர்களிலும், தாய்லாந்தில் பேங்காக் நகரிலும், தைவான் தலைநகர் தைப்பேயிலும், நடைபெறுகின்றது.

இவை தவிர, மத்திய கிழக்கு நாடான ஜோர்டானிலும் பெர்சே பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆக ஏறத்தாழ மலேசிய நகர்கள் உட்பட, உலகம் எங்கும் 40 நகர்களில் நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி உலக அளவில் மலேசியர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படுகின்றது.