Home Featured நாடு “சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!

“சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!

598
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – தன் மேல் நம்பிக்கை வைத்து மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ள மஇகா கிளைகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் “சவால் மிக்க பொறுப்பை கடமையுணர்வுடனும், அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்தும் சிறப்பாக ஆற்றுவேன்” என மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

“கடந்த 21ஆம் தேதி என்மேல் முழு நம்​பிக்கை வைத்து, எனக்கு ஆதரவு கொடுத்து மஇகாவின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு முதலில் உங்கள் அவைருக்கும் என் நெஞ்சார்ந்த – மனங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மஇகா கிளைகளுக்கு விடுத்த செய்தியில் கூறியுள்ள அவர் தொடர்ந்து –

“நம் கட்சி கடந்த 20 மாதங்களாக பலவிதமான சவால்களை​ எதிர்கொண்டு, பல பிரச்சினைகளைத் தாண்டி நாம் இந்த நிலையை அடைந்திருக்கின்றோம். நான் இந்த பதவியை நம் அரசியலில் ஏற்பாட்டுள்ள ஒரு சவால்மிக்க காலக்கட்டத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். உலகளாவிய பொருளாதார நிலை கவலைக்குரிய நிலையிலிருப்பதால், ந​மது நாட்டின் பொருளாதார நிலையும் மிக சவால்மிக்க நிலையில் இருக்கின்றது. இருப்பினும், நாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய அரசியல் நிலைத்தன்மைக்கும் பிரச்சினைகள் – சவால்கள் இருப்பதை நாமறிவோம். இந்தக் காலக்கட்டத்தில் மஇகாவின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று எடுத்த முயற்சியில், நாம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்று இந்த நிலைக்கு வந்திருக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மஇகாதான் இந்திய மக்களின் கட்சி

“மஇகா மக்களின் கட்சி. இந்திய சமுதாயத்திற்கு வளர்ச்சியையும், பாதுகாப்பையும் வழங்கும் கட்சி. இந்திய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டுவரும் கட்சி. இதனைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான், இந்தப் தேசியத் தலைவர் என்ற பொறுப்பினை கட்சி எனக்கு வழங்கியிருக்கின்றது. இது பதவியல்ல; சவால்மிக்க பொறுப்பு ஆகும்” என்றும் சுப்ரா தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

“எனவே, இந்த நிலையில் நாம் தொடர்ந்து பிரச்சினைகள் வராமல், நாமனைவரும் ஒற்றுமையாக இருந்து, நிதானத்தைப் பின்பற்றி, ஒருங்கிணைந்த சிந்தனையோடு செயல்படக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அத்துடன், கட்சியில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கத்தில் நாமனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால், நிகழ்காலச் சவால்களை வென்று, வருங்கால சவால்களையும் வெற்றிக் கொண்டு, ஒரு சிறந்த – சீர்மிகுந்த இந்திய சமுதாயத்தை உருவாக்க முடியும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒற்றுமையே நமது பலம்

“நமக்கு இருக்கின்ற கால அவகாசம் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. இந்த காலக்கட்டத்தில் நீங்கள் அனைவரும், என்னுடன் இருந்து – தோள்​ கொடுத்து – ஒத்துழைப்பு வழங்கி – சமுதாயத்தின் நலன் கருதி – நான் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் சுப்ரா மஇகா கிளைகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“எனவே, நாமனைவரும் தன்னலத்தை விட்டு, சமுதாய நலத்தை கருத்திற் கொண்டு, ஒரு நல்ல சிந்தனையோடு இந்த சவால்மிக்க காலத்தில் ஒற்றுமையாக இருந்தோமேயானால், வரக்கூடிய எல்லாப் பிரச்சினைகளையும் வென்று, ஒரு வெற்றிகரமான – ஒளிமயமான எதிர்காலத்தை நம் சமுதாயத்திற்கு உருவாக்கலாம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது. ஆகவே, மஇகாவின் தேசியத் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், நாம் தொடர்ந்து விரைவாகவும் – துரிதமாகவும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒ​ன்றி​ணைந்து செயல்படுத்துவோம்” என்றும் கட்சியின் 9வது தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்ரா கேட்டுக்கொண்டார்.

“ஒற்றுமையே பலம் – அதுவே இந்தியர்களுக்கு வளம்!” – என்ற தாரக மந்திரத்தோடு செயலாற்றுவோம் என்றும் சுப்ரா தமது செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.