சென்னை – தமிழக அரசின் வரிவிலக்குப் பிரச்சினையால் சூர்யாவின் ‘ஹைக்கூ’ படத் தலைப்பைப் ‘பசங்க-2’ என்று மாற்றிவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை மையமாக வைத்து இவர் இயக்கிய பசங்க’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.
இவர் தற்போது ‘ஹைக்கூ’ என்ற பெயரில் இன்னொரு குழந்தைகள் படத்தை எடுத்து வருகிறார். இதில் சூர்யா, கார்த்தி, அமலாபால், பிந்துமாதவி ஆகியோர் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிறுவனும், சிறுமியும்தான் இந்தப் படத்தின் கதாநாயகன்- கதாநாயகி.
இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், ஹைக்கூ’ தலைப்பு தொடர்பாகச் சர்ச்சைகள் கிளம்பின. இது தமிழ்ப் பெயர் அல்ல என்றும், எனவே படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்றும் கூறப்பட்டது.
தமிழில் தலைப்பு வைத்தால் மட்டுமே தமிழ்ப் படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும். இல்லையென்றால் வரிவிலக்கு கிடையாது என்பது தமிழக அரசின் சட்டம். இது கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது.
இந்தக் குழப்பத்தால் பாண்டிராஜ் ‘ஹைக்கூ’வுக்குப் பதிலாக, ‘பசங்க-2’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.
இதுகுறித்துப் பாண்டிராஜ் கூறியதாவது:
இப்படத்திற்கு‘ ஹைக்கூ’ தலைப்புப் பொருத்தமாக இருந்ததால் வைத்தேன். ஆனால் ‘ஹைக்கூ’ ஜப்பான் பெயர் என்றும், இந்தத் தலைப்பில் படம் வெளி வந்தால் அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது.
‘ஹைக்கூ’ தமிழ்ப் பெயர் என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன். பாரதிதாசன் கவிதைகளில் இந்தப் பெயர் உள்ளது. கவிஞர் வைரமுத்துவின் பேரன் பெயரும் ‘ஹைக்கூ’தான்.
ஆனாலும், ‘மாஸ்’ படத்துக்குப் பிரச்சினை வந்ததுபோல், இந்தப் பெயருக்கும் வரலாம் என்றார்கள். எதற்குத் தேவையில்லாத குழப்பம் என்று தலைப்பைப் ‘பசங்க-2’ என மாற்றிவிட்டேன்.
ஆனால், இந்தப் படத்தின் கதைக்கும், ‘பசங்க’ படக்கதைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” எனக் கூறினார்.