பெய்ஜிங் – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக பெற்ற வெற்றியின் 70-வது ஆண்டை நினைவு கூறும் வகையில், சீனா மிகப் பெரிய இராணுவப் பேரணியை இன்று நடத்தி மேற்குலக நாடுகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட தளபதிகள் உட்பட 12,000 பேர் தியனன்மன் சதுக்கத்தில் நடந்த இந்தப் பேரணியில் கலந்துகொண்டு அணிவகுப்பு நடத்தினர்.
அணிவகுப்பிற்கு பிறகு, தங்கள் இராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், பல்வேறு ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சீன இராணுவத்தினர் காட்சிப்படுத்தினர்.
இத்தனை ஆச்சரியங்கள் இருந்தாலும், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் பேச்சு தான் உலகத் தலைவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்தது.
“பாரபட்சம், பாகுபாடு, வெறுப்பு மற்றும் போர் ஆகியவை எப்போதும் பேரழிவை உண்டாக்கும். அதை உணர்ந்துள்ள சீனா எப்போதும் அமைதியான வளர்ச்சி பாதையில் தான் பயணிக்கும்” என்று தனது உரையில் அவர் தெரிவித்தார்.
மேலும், 2.3 மில்லியனாக இருக்கும் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் 300,000 பேர் வரை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகவும் அறிவித்தார்.
அண்டை நாடுகளுடன் எல்லை விவகாரங்களில், தங்கள் நாட்டு இராணுவத்தினரைக் கொண்டு எப்போதும் மிரட்டி வரும் சீனா, திடீரென கருணை முகம் காட்டி உள்ளது. அதன் காரணமாக உலகத் தலைவர்கள், ஜி ஜிங்பிங்கின் உரையை வரவேற்றுள்ளனர். அதே சமயத்தில், ஜி ஜிங்பிங் தனது உரையில், ஜப்பானுக்கு எரிச்சலூட்டும் பேச்சையும் தொடர்ந்துள்ளார்.
அவர், “இரண்டாம் உலகப் போரில், ஜப்பானை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது, சீனாவை ஒரு உலக சக்தியாக நிலைநிறுத்தியது” என்று கூறினார். ஜிங்பிங்கின் இந்த பேச்சுக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.