புனேவைச் சேர்ந்த இஷா ஹண்டா (26) என்ற இளம் பெண், கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரில் ஆடை வடிவமைப்பாளராகவும், உடல் நலன் தொடர்பான ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரில் 13 மாடிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார். முதலில் இஷா கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் நடந்த தீவிர விசாரணையில், இஷாவின் தொலைபேசி காவல்துறையினரிடம் கிடைத்தது.
அதனை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இஷா இறப்பதற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன், எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என இணையதளங்களில் தேடி உள்ளார். ஏறக்குறைய 89 இணைய தளங்கள் இறப்பதற்கு சிறந்த வழிகளாக, தூக்க மாத்திரை சாப்பிடுவது, உடலின் மின்சாரம் பாய்ச்சுவது, தூக்கிட்டுக் கொள்வது, உயரமான கட்டிடத்தில் இருந்து குதிப்பது உள்ளிட்ட சிலவற்றை பரிந்துரைத்துள்ளன.
இறுதியாக இஷா, உயரமான கட்டிடத்தில் இருந்து குதிப்பதை தேர்வு செய்த தற்கொலை செய்து கொண்டார். இதில் மிகவும் கொடுமையான ஒன்று என்னவென்றால், எவ்வளவு உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும், கட்டிடத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பவற்றையும் அந்த இணையதளங்கள் மிகத் துல்லியமாக காட்டி உள்ளன.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி கூறுகையில், “இஷாவின் பையில் 250 கிராம் போதை பொருளும், சில மாத்திரைகளும் இருந்தன. சாதாரண மனநிலையில் இருப்பவர்களால் இப்படி செய்ய முடியாது. இஷா, அளவுக்கு அதிகமான போதை பொருளை பயன்படுத்தி, இந்த கட்டிடத்தில் இருந்து குதித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.