சென்னை – நாளை ஆசிரியர் தினம் கொண்டாடும் இந்திய ஆசிரியப் பெருமக்களுக்குப் பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.
ஆசிரியர் தினத்தையொட்டி தலைநகர் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி “ஓர் ஆசிரியராகப் பணியாற்றுவது மற்ற பணிகளை செய்வது போன்றதல்ல. ஆசிரியர் பணி மிகவும் வித்தியாசமானது. அடுத்த தலைமுறையை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
ஓர் ஆசிரியர் எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகப்பெரிய பொறுப்பைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு பணியாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக்கண்ணை திறந்திடும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியினை ஆற்றி வருபவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.
நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களைத் தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் உயரிய பணியினை ஆற்றி வருபவர்கள் ஆசிரியர்ப் பெருமக்கள்.
அவர்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.