கோலாலம்பூர் – செப்டம்பர் 16 -ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவப்பு சட்டைப் பேரணியை பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக காவல்துறை அதற்கு தடைவிதித்துள்ளதாக துணை தேசியக் காவல்படைத் தலைவர் நூர் ரசீத் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் புக்கிட் பிந்தாங் மற்றும் பெட்டாலிங் வீதி ஆகிய பகுதிகளில் அந்தப் பேரணியை நடத்த அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
மேலும், இந்தப் பேரணி கடந்த ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பெர்சே 4 பேரணிக்குப் போட்டியாக நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நடத்தப்பட்ட பெர்சே 4 பேரணியில் சீனர்கள் பெரும்பான்மை வகித்து மலாய்காரர்களை அவமதித்துவிட்டதாக விமர்சகர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
எனவே மலாய்க்காரர்களின் ஒற்றுமையையும், கௌரவத்தையும் காட்ட 500 மலாய் அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த சிவப்பு சட்டைப் பேரணியை நடத்துவதாக கபுன்கன் என்ஜிஓ – என்ஜிஓ மலேசியா தலைவர் ஜமால் முகமட் யூனோஸ் உத்துசான் மலேசியா இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.