Home Featured நாடு ‘டத்தோ’ விருது பெறும் மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் – ‘டி.ஜே.என்.’ பெறும் தேவேந்திரன், முத்தமிழ்...

‘டத்தோ’ விருது பெறும் மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் – ‘டி.ஜே.என்.’ பெறும் தேவேந்திரன், முத்தமிழ் மன்னனுக்கு செல்லியல் வாழ்த்துகள்!

1106
0
SHARE
Ad

பினாங்கு – பினாங்கு ஆளுநர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல் ரஹ்மான் ஹாஜி அபாசின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ள விருதுகள் பட்டியலில், சக ஊடகவியலாளர்களான, ‘மக்கள் ஓசை’ நாளிதழின்  ஆசிரியர் எம்.இராஜன் மற்றும் மக்கள் ஓசை துணை ஆசிரியர்கள் கு.தேவேந்திரன், முத்தமிழ் மன்னன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, ‘செல்லியல்’ குழுமத்தின் சார்பில் எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வழக்கமாக அரசியல்வாதிகளுக்கும், சமூக இயக்கவாதிகளுக்கு மட்டுமே அதிக அளவில் வழங்கப்பட்டு வரும் மாநில மற்றும் மத்திய அரசு விருதுகள், அவ்வப்போது, பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இருப்பினும், டத்தோ போன்ற உயரிய விருதுகள் நினைவு தெரிந்து இதுவரையில் தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. இருப்பினும், மற்ற மொழிப் பத்திரிக்கை ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள் யாருக்கும் தரம் குறைந்தவர்களும் இல்லை.

#TamilSchoolmychoice

ஆழமான, அழுத்தமான, எழுத்து வண்ணங்களை வழங்குவதிலும், சமூகப் போராட்ட உணர்வுடன் பேனா பிடித்து முழக்கமிடுவதிலும், இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளை முன் நிறுத்தி தமிழ்ப்  பத்திரிக்கைகளை மக்களிடையே கொண்டு சென்றதிலும், தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர்கள் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை பதிவு செய்து வந்திருக்கின்றார்கள்.

‘டத்தோ’ எம்.இராஜன்

rajan.M-makkal osai-அந்த வகையில், தமிழ்ப் பத்திரிக்கை உலகில் நீண்ட காலமாக ஈடுபட்டு, தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கும், மூத்த பத்திரிக்கையாளரான எம்.இராஜன் (படம்),  எல்லா வகையிலும், டத்தோ விருது பெறுவதற்கு தகுதியானவர் ஆவார்.

இளவயது  முதல், தமிழ் நேசன், தமிழ் ஓசை, மலேசிய நண்பன், மக்கள் ஓசை என பல்வேறு பத்திரிக்கைகளில் தனது அழுத்தமான முத்திரையையும், தடத்தையும் பதித்து வந்திருக்கும் எம்.இராஜனுக்கு செல்லியல் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

தமிழ்ப் பத்திரிக்கை உலகின் மூத்த முன்னோடிகள் பலர் இருந்தாலும், நாளிதழ் ஒன்றின் நடப்பு ஆசிரியர் என்ற முறையில் எம்.இராஜனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த விருது, தமிழ்ப் பத்திரிக்கை உலகிற்கு கிடைத்திருக்கும் கௌரவமாகக் கருதி வாழ்த்துகின்றோம்.

கு.தேவேந்திரன், முத்தமிழ் மன்னன்

devendran-makkal -osai

Muthamil-mannan-makkal-osai

கு.தேவேந்திரன்                                                           முத்தமிழ் மன்னன்

அதே வேளையில் டி.ஜே.என். என்ற விருதினை பினாங்கு ஆளுநரிடம் இருந்து பெறும் மக்கள் ஓசை நாளிதழின் துணை ஆசிரியர்களாக கு.தேவேந்திரனும், முத்தமிழ் மன்னனும் நீண்ட காலமாக தமிழ்ப் பத்திரிக்கை உலகோடு தங்களைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

சமூகம், அரசியல், கவிதை, கட்டுரைகள் என பலதரப்பட்ட இலக்கியத் தடங்களில் முத்திரை பதித்து வரும் அவர்களின் எழுத்துலகப் பயணம் இனிதே தொடர வேண்டும், மேலும் பல விருதுகளையும், கௌரவங்களையும் அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்றும் செல்லியல் சார்பாக வாழ்த்துகின்றோம்.

இந்த முறை பினாங்கு ஆளுநர் பிறந்த நாள் விழாவில் அதிகமான தமிழ்ப் பத்தரிக்கையாளர்களுக்கும், பத்திரிக்கைத் துறையில் தொடர்பு கொண்ட படப்பிடிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதிக அளவில் விருதுகள் வழங்கப்பட்டிருக்கும் நடைமுறை பாராட்டுக்குரியது.

இந்த நடைமுறை மற்ற மாநில சுல்தான்கள், ஆளுநர்கள் பிறந்த நாள் விருது வைபவங்களிலும், மத்திய அரசு விருதுகளின் விருதுகள் வழங்கப்படும்போதும் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகின்றோம் – எதிர்பார்க்கின்றோம்.

-செல்லியல் ஆசிரியர் குழுமம்