பாங்காக் – இராணுவம் ஆட்சி செய்து வரும் தாய்லாந்தில், ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய வரைவு ஏற்கப்படும் வரை ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதமே, இராணுவ ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அந்நாட்டின் பிரதமரும், இராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஒச்சா தெரிவித்திருந்தார். மேலும் அவர், ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு புதிய அரசியலமைப்பு வரைவுச் சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்காக, புதிய அரசியல் சட்டத்தை இயற்ற 247 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சீர்திருத்த ஆணையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. எனினும், தேசிய சீர்திருத்த ஆணைய உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் அந்த சட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்ததால், புதிய வரைவு நிராகரிக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக, 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் சட்ட வரைவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு புதிய அரசியல் சட்ட வரைவை தயாரிக்க 180 நாட்களை எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.