சென்னை- ரூ 80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் திருடிய வழக்கில் பிரபல இயக்குநர் வீ.சேகர் கைதானதைத் தொடர்ந்து அதில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமறைவானார். அவரைச் சிலை தடுப்புக் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் பெங்களூரில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயர் நகரில் சிலை தடுப்புக் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 80 கோடி மதிப்பிலான சிலைகள் சிக்கின.அவற்றைக் கடத்தி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம் மற்றும் அரசு அச்சக ஊழியர் கருணாகரன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரபல திரைப்பட இயக்குநர் வீ.சேகருக்கு இதில் முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து பெண் நிருபர் மாலதி என்பவரும் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், இந்தச் சிலைத் திருட்டில் சென்னையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ரவிச்சந்திரன் என்பவருக்கும் இதில் முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்தது. ஆனால்,வீ.சேகர் கைது செய்யப்பட்டதும் அவர் தலைமறைவானார். அவரைச் சிலைத் தடுப்புக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், அவரைப் பெங்களூரில் வைத்துக் கைது செய்தனர். அவருடன், சிலைகளைத் திருடிய மாரி, கோகுல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.