பெங்களூர்: பெங்களூரில் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து அமுக்கியதில் 5 வடமாநிலக் கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரில் பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெங்களூர் ஹெக்டே நகர் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வேலை செய்யும் 300-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இரும்புத் தகட்டினால் தற்காலிக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
அதிகாலை 4 மணி அளவில் அடுக்குமாடிக் கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து தொழிலாளர்கள் வீடுகள் மீது விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சிறுமி உட்பட 17 பேர் படுகாயத்துடன் மீட்கப் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பெங்களூர் பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விளைந்திருந்த வாழை, நெல், கரும்புத் தோட்டம் வெள்ளத்தில் மூழ்கிப் பெருத்த சேதமடைந்துள்ளன.