கெய்ரோ – அகதிகளுக்காகத் தீவு ஒன்றை வாங்கி, அதில் அகதிகளைக் குடியேற்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த ‘நகுய்ப் சாகுரிஸ்’ என்ற கோடீஸ்வரர் முன் வந்துள்ளார்.
மேலும், அந்தத் தீவுக்கு துருக்கி எல்லைக் கடற்கரையில் இறந்து கிடந்த சிரியா நாட்டுச் சிறுவன் ‘அயலான்’ பெயரைச் சூட்டவும் அவர் முடிவு செய்துள்ளார்.
சிரியா உள்நாட்டுப் போரினால் ஐரோப்பாவிற்கு அகதியாகப் புகலிடம் தேடிப் போன போது, துருக்கி நாட்டுக் கடலில் மூழ்கி, கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அயலானின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக மக்களையெல்லாம் கலங்க வைத்தது.
அதுவரை அகதிகளை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்த பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளெல்லாம் குழந்தை அயலானின் மரணத்திற்குப் பிறகு அகதிகளை ஏற்றுக் கொண்டன.
இந்நிலையில், பல இன்னல்களுக்கு ஆளாகும் அகதிகளுக்கு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொடுக்க எகிப்து நாட்டைச் சேர்ந்த தொலை தொடர்பு நிறுவன அதிபர் நகுய்ப் சாகுரிஸ், கிரீஸ் அல்லது இத்தாலியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அத்தீவுக்கு அயலான் பெயரைச் சூட்டி அங்கு அகதிகளைக் குடியமர்த்த உள்ளார்.
அத்தீவில் அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரவும், வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவும் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தியும் வெளியிட்டுள்ளார்.