சென்னை- மியான்மர் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 57 பேர் ஆதரவின்றி சென்னையில் அங்குமிங்கும் சுற்றித் திரிகின்றனர். அவர்களை எங்கும் தங்குவதற்கு அனுமதிக்காததால் எங்குபோவதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அவர்கள் இவ்வாறு அலைக்கழிக்கப்படும் விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம், இது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேணடும் எனத் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
சிரியா நாட்டு அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குப் போன போது, படகு கவிழ்ந்து பலர் இறந்தும்போனதும்,குறிப்பாக ஒரு குழந்தை மரணம் அடைந்து துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த பரிதாபக் காட்சியால் பாதிக்கப்பட்டு அகதிகளை ஆதரிக்கும் மனப்பானமை பெருகி வரும் வேளையில்,சென்னையில் மியான்மர் நாட்டு அகதிகள் 57 பேருக்குத் தங்கக் கூட இடம் தராமல் துரத்தும் அவலம் அரங்கேறியுள்ளது.
மியான்மரில் இருந்து 57 பேர் தங்களது உடைமைகளுடன் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னைக்கு அகதிகளாக வந்துள்ளனர். முதலில் சென்னை கேளம்பாக்கத்தில் தங்கியிருந்த அவர்கள்,அங்கிருந்து காலை பண்ணி வந்து மணலியில் ஒரு வீடெடுத்துக் குடியேறியுள்ளனர்.
ஆனால், அப்பகுதி மக்கள் அவர்கள் அங்கு தங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால்,உடனடியாக அங்கிருந்து மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு சென்னை மண்ணடிப் பகுதிக்கு வந்த அவர்கள் அங்கும் எங்கு தங்குவது எனத் தெரியாமல்
தங்களின் உடைமைகளுடன் தெருக்களில் சுற்றித் திரிகின்றனர்.
இச்செய்தி பத்திரிக்கை முதலான ஊடகங்களில் செய்தி வெளியானதால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி டி.முருகேசன் அங்கு வந்து இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டார்.
அதன் பின்னர், மியான்மர் அகதிகளின் அவல நிலை குறித்து அவர் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு வழக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.