புதுடில்லி – தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து 2 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று பாமக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கு இன்று உச்ச நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத், “கடந்த 2002–ஆம் ஆண்டு மதுக்கொள்கைப்படி நெடுஞ்சாலைகளில் இருந்து 220 மீட்டர் தொலைவில் மதுக்கடைகளை அமைக்கலாம் என்ற விதி உள்ளது. அதன்படிதான் நெடுஞ்சாலை ஓரங்களில் மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன” என வாதாடினார்.
அதற்குப் பொது நல வழக்குத் தொடர்ந்த பாமக வழக்கறிஞர் பாலு, “நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகடைகளில் ஓட்டுநர்கள் மது குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைகளின் ஓரம் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்” என்றார்.
இருவரது கருத்தையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து 2 மாதங்களுக்குள் புதிய மதுக்கொள்கை வகுக்க வேண்டும் என்றும், அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.