ராய்ப்பூர் – சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடிநீர் புட்டியில் பாம்பு கிடந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ராய்ப்பூரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு ‘அமன் அக்வா’ என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கிய குடிநீர் புட்டிகள் வழங்கப்பட்டன.அதில் ஒரு புட்டியில் குட்டிப் பாம்பு ஒன்று கிடப்பதை முதல்வருக்கான மருத்துவ ஆலோசகர் கண்டுபிடித்து, உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதைப் பார்த்து முதல்வரும் மத்திய அமைச்சரும் அதிர்ந்து போனார்கள்.
அந்தக் குடிநீரைத் தயாரித்த நிறுவனம் ராய்ப்பூர் மாவட்ட பாரதீய ஜனதா துணைத் தலைவர் சயீத் அலி அமான் என்பவருக்குச் சொந்தமானதாகும். அவரிடம் இது பற்றிக் கேட்டதற்கு,”இது எனக்கு எதிரான சதி.யாரோ புட்டியின் மூடியைத் திறந்து குட்டிப் பாம்பை உள்ளே போட்டிருக்கிறார்கள்.என்னிடம் அந்தப் புட்டியைக் காட்டியபோது அதில் இருந்த சீல் உடைக்கப்பட்டிருந்தது” என்று குற்றம் சாட்டினார்.
இது பற்றி முதல்வர் ராமன் சிங், “இந்த விவகாரம் குறித்துக் குடிநீர் நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படும்” எனக் கூறினார்.