புதுடில்லி – தங்கப் பத்திரம் திட்டம், தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, 2015–16 நிதி ஆண்டுக்கான மத்திய வரவு-செலவுத் திட்டத்தைக் (budget) கடந்த பிப்ரவரி மாதம் 28–ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது அவர், ‘‘இந்தியாவில் மக்களிடம் 20 ஆயிரம் டன் தங்கம் பயன்படுத்தப்படாமல், வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. இந்தத் தங்கத்தைப் புழக்கத்துக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகிற வகையில் தங்கப் பத்திரத் திட்டம், தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்’’ என அறிவித்தார்.
இவ்விரு திட்டங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரத் திட்டத்தின்படி, தங்கத்தை உலோகமாக வாங்குவதற்குப் பதிலாகப் பத்திரமாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
2கிராம்,5 கிராம், 10கிராம்,50கிராம், 100 கிராமிலிருந்து 500 கிராம் வரை பத்திரங்கள் கிடைக்கும். இந்தப் பத்திரங்கள் 5 முதல் 7 ஆண்டுகளில் முதிர்வு அடையத் தக்கவை. இதற்கான வட்டி விகிதம், சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படும்.
தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஓராண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு வங்கிகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் 30 கிராம் முதலீடு செய்ய வேண்டும்.
முதிர்வு காலத்தின்போது, அப்போது உள்ள மதிப்புக்கேற்ப வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் தங்கத்தை நகை உற்பத்தியாளர்களுக்கு வங்கிகள் விற்பனை செய்யும். இதனால் இறக்குமதி குறையும்.
இதன்மூலம் நமது பொருளாதாரம் மேம்படும். இத்திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகும்.