புது டெல்லி, நவம்பர் 14 – உணவு பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா-அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஜெனிவா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின் போது உலக நாடுகள் இடையே வர்த்தக நடைமுறை ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சி நடைபெற்றது. எனினும் அந்த முயற்சிக்கு இந்தியா முட்டுக்கட்டையிட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தும், இந்தியா தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.
அதற்கு முக்கியக் காரணம், வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு உணவுப்பொருட்களை மானிய விலையில் வழங்கவும், உணவு தானியங்களை தேவையான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ளவும் அந்நாடுகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதாகும்.
இதற்கு உலக வர்த்தக அமைப்பு மறுப்பு தெரிவித்த போது, இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது. இந்நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழு அங்ககரிக்க உள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “உணவு பாதுகாப்பு விவகாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், வர்த்தகத்தை எளிதாக்கும் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்துள்ளது.”
“இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் பலவும் ஆதரித்துள்ளன. அமெரிக்காவும், இந்தியாவை புரிந்து கொண்டுள்ளது. இது, உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகளும் நிறைவேற வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.