புதுடெல்லி, பிப்ரவரி 5 – இந்தியாவில் திறன்பேசிகள் வர்த்தகத்தில் சாம்சங்கை பின்னுக்கு தள்ளி, இந்திய நிறுவனமான மைக்ரோமாக்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
ஆசிய அளவில் முக்கிய வர்த்தக சந்தைகளான சீனா மற்றும் இந்தியாவில் ஒரே சமயத்தில், சாம்சுங் தனது இடத்தை பல வருடங்களுக்குப் பிறகு இழந்துள்ளது.
நவீன காலத்தில் மனிதனுடன் ஒன்றிவிட்ட திறன்பேசிகள், வர்த்தகம், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களுக்கும் பயன்படும் வகையில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பேர் சொல்லிக் கொள்ளும்படி, நான்கைந்து நிறுவனங்களே செல்பேசிகளை உற்பத்தியை செய்து வந்தன.
இந்நிலையில், திடீர் என ஏற்பட்ட தேவைகளும், வர்த்தக புரட்சியும் பல்வேறு நிறுவனங்கள் உருவாவதற்கு வழிவகுத்தன. அப்படி, இந்திய மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவான நிறுவனம் தான் மைக்ரோமேக்ஸ்.
நோக்கியா, சாம்சுங், எச்டிசி மற்றும் ஆப்பிள் என முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த சமயத்தில் உருவாக்கப்பட்ட மைக்ரோமேக்ஸ், ஆரம்பத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை.
எனினும், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்களை கருத்தில் கொண்டு மைக்ரோமேக்ஸ், உருவாக்கிய மலிவு விலை செல்பேசிகள் அந்நிறுவனத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்நிறுவனம் சாம்சுங் மற்றும் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய திறன்பேசிகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.
இதற்கிடையே, சீன நிறுவனம் சியாவுமி, இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கவும், முன்னணி நிறுவனங்களான சாம்சுங் மற்றும் ஆப்பிளின் விற்பனை இந்தியாவில் பெரியளவில் பாதிப்பிற்குள்ளானது.
இதனை பயன்படுத்திக் கொண்ட மைக்ரோமேக்ஸ், மலிவு விலை திறன்பேசிகளை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. கடந்த அக்டோபர்-டிசம்பர் மாதம் வரை, அந்நிறுவனத்தின் வர்த்தகம் பற்றி கேனலிஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த 2014ம் ஆண்டின் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட திறன்பேசிகளில் 22 சதவீத பங்கை, மைக்ரோமாக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது சாம்சுங் நிறுவனத்தை விட அதிகமாகும்”
“மைக்ரோமாக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய கேன்வாஸ் நைட்ரோ மற்றும் கேன்வாஸ் ஹியூ உள்ளிட்ட திறன்பேசிகளின் விற்பனையே, அந்நிறுவனம் முன்னிலை பெறுவதற்கான காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் சியாவுமியிடம் வர்த்தகத்தை இழந்த சாம்சுங், இந்தியாவில் மைக்ரோமாக்ஸிடம் வர்த்தகத்தை இழந்திருப்பது, அந்நிறுவனத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.