போபால் – தமிழில் உள்ள சொற்களை இந்தியில் சேர்ப்பது குறித்த கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக இந்தி மாநாட்டை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
1975–ஆம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் 9–ஆவது மாநாடு தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ் பர்க் நகரில் 2012–ஆம் ஆண்டு நடந்தது.
10–ஆவது உலக இந்தி மாநாடு போபாலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 3 நாள் மாநாடு போபாலில் இன்று தொடங்கியது. மாநாட்டைப் பிரதமர் மோடி துவக்கி வைத்துப் பேசியது யாதெனில்:
“உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு டீக்கடைக்காரரிடம் இருந்து தான் நான் இந்தி மொழியைக் கற்றுக்கொண்டேன். எனது தாய் மொழி குஜராத்தி என்றாலும், எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைந்திருக்கிறேன்.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்று சேர்க்க இந்தியைப் பயன்படுத்த வேண்டும் எனபதே என் எண்ணம்.அவ்வாறு இந்தியைப் பயன்படுத்தினால் பிற மொழிகள் பலப்படும்.
வங்காளி, தமிழ் மொழி வார்த்தைகளை இந்தியில் சேர்க்க கருத்தரங்கம் நடத்த பரிசீலனை நடந்து வருகிறது” என்றார்.