பெங்களூர் – கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட மாபெரும் வீரர் திப்பு சுல்தானின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில், திப்பு சுல்தானாக நடிக்க ரஜினிகாந்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தயாரிப்பாளர் அசோக் கெனி தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாகப் பேய்ப் படங்களுக்கு நிகராகச் சரித்திரப் படங்களுக்கும் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.அதற்குக் காரணம்,‘பாகுபலி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரூ. 500 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தது தான்!
பாகுபலியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘புலி’ படமும் சரித்திரக் கதையம்சம் கொண்டதாகத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், திப்பு சுல்தான் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க பிரபல கன்னடப் பட அதிபர் அசோக் கெனி முன்வந்துள்ளார்.
திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது அவரது ஆசை.
இதுபற்றி அவர் கூறியதாவது: ‘‘திப்பு சுல்தான் வாழ்க்கையைப் படமாக்குவது எனது நீண்ட நாள் கனவு.திப்பு சுல்தானாக ரஜினிகாந்த் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதற்காக ரஜினியை சில வருடங்களுக்கு முன்பு அணுகிப் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால், அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவேலைகளைத் தொடங்க முடியவில்லை.
சரித்திரப் படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில் மீண்டும் அவரிடம் இந்தப் படம் தொடர்பாகப் பேசி வருகிறேன்.
திப்பு சுல்தானின் பெருமைகள் பலவற்றை இன்னும் உலகம் அறியாமல் இருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனுக்குக் கப்பல்களைப் பரிசாகக் கொடுத்த பெருமைக்கு உரியவர். திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து, அந்தப் படம் உலகம் முழுவதும் திரையிடப்படுவதை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும், இப்படத்தை ராஜமெளலி இயக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.