நியூயார்க் – அமெரிக்காவில் வயதான சீக்கியர் ஒருவரைத் தீவிரவாதி பின் லேடன் எனக் கருதித் தாக்கியுள்ளனர்.இந்தத் தாக்குதலில் அந்தச் சீக்கியர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில், அமெரிக்காவை வேவு பார்த்து லண்டனுக்குத் தப்பிச் சென்று பதுங்கியுள்ள உளவாளி ஒருவர், பின்லேடன் உயிருடன் இருப்பதாக ஒரு வதந்தியைக் கிளப்பியது நினைவிருக்கலாம். அந்தச் சந்தேகத்தில் சீக்கியரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து, அங்குள்ள சீக்கியர்களை முஸ்லிம்கள் எனத் தவறாகக் கருதி அடிக்கடி தாக்குதல் நடக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் சீக்கியர் ஒருவரைத் தீவிரவாதி என்று கூறித் தாக்கிய நபர் அவரைக் காரில் 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்றார்.
அதற்கு முன்பு 2012-ஆம் ஆண்டில் விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தளத்திற்கு வந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 6 பேர் பலியானார்கள்.
இன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினமாகும்.
இந்நிலையில், நேற்று சீக்கியர் ஒருவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.