சென்னை- இலங்கையிலிருந்து 105 பயணிகளுடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னைக்கு வந்த இலங்கை விமானத்தின் சக்கரத்தில் திடீரெனப் பழுது ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கும் போது பெரும் பதற்றம் ஏற்பட்டது. விமானியின் சமயோசித புத்தியாலும் சாமர்த்தியத்தாலும் ஒடுதளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.இதனால்105 பயணிகளும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் சென்னையில் தரையிறங்கப் போகும் போது தான் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாகச் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தைத் தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் தரையிறங்கி ஓடுபாதையிலேயே நின்று விட்டது.
பின்னர் விமானத்தை அங்கிருந்து இழுத்து விமானம் நிற்கும் பகுதிக்குக் கொண்டு வந்து, அதிலிருந்த 105 பயணிகளையும் பத்திரமாகக் கீழே இறக்கினர்.
அதன் பின்னர் விமானத்தின் சக்கரங்கள் சரி செய்யப்பட்டு, அதிகாலை 4 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் காலை 6 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
பயணிகள் அனைவரும் விமானிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.