புதுடில்லி – பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களாகச் செயல்பட்ட கமல், சல்மான் கான், அமலா, பிரியங்கா சோப்ரா, சச்சின் டெண்டுல்கர்,தொழிலதிபர் அனில் அம்பானி, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் உள்ளிட்ட 100 பிரபலங்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேநீர் விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் சசிதரூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
மோடியின் அழைப்பை ஏற்று நடிகர் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இந்தத் திட்டத்தின் தூதுவர்களாகச் செயல்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடையே பிரபலப்படுத்தினர்.
இந்நிலையில், தூய்மை இந்தியாவின் தூதுவர்களாகச் செயல்பட்ட அனைத்துப்பிரபலங்களும் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.