மும்பை- மும்பையில் 2006ஆம் ஆண்டு 188 பேர் உயிரிழந்த மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெவ்வேறு வழித் தடங்களில் சென்ற 7 ரயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர்; 829க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அதில் ஒருவர் 9 ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்து நேற்று தான் உயிரிழந்தார்.
இத்தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்; மேலும் 14 பேர் தலைமறைவானார்கள்.
இவ்வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 192 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 5 ஐஏஎஸ் அதிகாரிகள், 18 மருத்துவர்களும் அடங்குவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவ்வழக்கு விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று 13 பேரும் குற்றவாளியென உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கில் அப்துல் வஹீத் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இக்குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.