Home Featured கலையுலகம் எம்ஜிஆர் படத்திற்கு அதிகாலையிலேயே வரிசையில் நின்று டிக்கட் வாங்கிய ரஜினிகாந்த்!

எம்ஜிஆர் படத்திற்கு அதிகாலையிலேயே வரிசையில் நின்று டிக்கட் வாங்கிய ரஜினிகாந்த்!

532
0
SHARE
Ad

rajinikanth-rm-veerappan-s-90th-birthday-celebrations_144185839380சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் செய்தித் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதற்கு முன்பாக எம்ஜிஆரின் நிர்வாகியாகவும், சத்யா ஸ்டூடியோவின் பொறுப்பாளராகவும் இருந்தார். பின்னர் எம்ஜிஆரை வைத்து சத்யா மூவிஸ் நிறுவனத்தின் கீழ் பல வெற்றிப் படங்களையும் தயாரித்தார்.

அண்மையில் அவரது 90வது பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சுவாரசியமான தகவலை தனது உரையில் தெரிவித்தார்.

“பெங்களூர்ல, என்னோட நண்பர் ஒருத்தர் இருந்தார். அவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகர். அவர், என்கிட்டே ஒரு போட்டி வைத்தார். சத்யா மூவீஸோட ‘நான் ஆணையிட்டால்’ படம் ரிலீஸாகப் போகுது. உன்னால் முடிந்தால் முதல் நாள், முதல் ஷோவுக்கு டிக்கெட் எடுத்துக்காட்டுனு சவால் விட்டார். நான் 65 ரூபாயை வெச்சுக்கிட்டு அதிகாலையில நாலு மணிக்கே தியேட்டருக்குப் போனேன். அப்பவே நிறைய கூட்டம் முண்டியடிச்சுக்கிட்டு நின்னுச்சு. அந்தக் கூட்டத்துலேயும் டிக்கெட் எடுத்து சவாலில் ஜெயிச்சேன்” என ரஜினிகாந்த் கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இதனை விகடன் இணையத் தளம் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது.

கால ஓட்டத்தில் அதே எம்ஜிஆருக்கு இணையான உச்ச நட்சத்திரமாக இன்று வரை மக்களின் அபிமானத்தைப் பெற்று வலம் வந்து கொண்டிருக்கின்றார் ரஜினி.

எந்த ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘நான் ஆணையிட்டால்’ படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்றாரோ, பின்னர் அதே ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவீஸ் சார்பில் தயாரித்த ‘ராணுவ வீரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார் ரஜினி.

அந்தப் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் ரஜினி கூறியிருக்கின்றார்.

-செல்லியல் தொகுப்பு