சென்னை – இந்திய அரசாங்கம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பேசினார்-நடந்து கொண்டார் எனக் காரணம் காட்டி, அவர் இந்தியாவுக்கு வரமுடியாது என்ற தடையை விதித்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
சென்னை விமான நிலையத்தில் இராமசாமியை வரவேற்க வந்திருந்த வைகோ (டுவிட்டர் படம்)
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இராமசாமி ஏற்பாட்டில் பினாங்கில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த மதிமுக தலைவர் வைகோ இந்த தடை குறித்து அளித்த ஆவேசத்துடன் அளித்த பேட்டியில், “இராமசாமி மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு அவருக்கு குடிநுழைவு அனுமதி கிடைப்பதற்குப் போராடுவேன். இந்த விவகாரத்தைப் மக்கள் மன்றம் கொண்டு செல்வேன்” என முழங்கியிருந்தார்.
அதற்கேற்ப, தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் விதமாக, இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த வைகோ, இராமசாமி விவகாரத்தை எழுப்பியிருந்தார். இராமசாமிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்தால் போராடப் போவதாகவும், செப்டம்பரில் திருப்பூரில் நடைபெறும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் கலந்து கொள்ள இராமசாமியைத் தான் அழைத்திருப்பதாகவும் வைகோ அறிவித்திருந்தார்.
வைகோவின் முயற்சிகளைத் தொடர்ந்து மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இராமசாமி மீதான தடையை நீக்கி, இந்தியா வருவதற்கு அவருக்கு குடிநுழைவு அனுமதியை வழங்கியது.
இதன் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக தாய்த் தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் இருந்த இராமசாமி நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை வைகோ வரவேற்றார்.
செப்டம்பர் 15இல் திருப்பூரில் வைகோ ஏற்பாட்டில் நடைபெறும் திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேராசிரியர் இராமசாமி கலந்து கொள்வார்.