ஒடிசா – ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் தெரிவித்துப் பள்ளிக்கு விடுமுறை விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாகக் குழந்தைகள் வீட்டிற்கு வந்துவிட்டதைக் கண்டு பெற்றோர்கள் விசாரித்த போது தான் இவ்விசயம் தெரிந்திருக்கிறது.
உடனே இது குறித்துப் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்த போது, மற்றொரு பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொண்ட சமயத்தில், வேறொரு ஆசிரியர் அவரிடம் வாஜ்பாய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாராம். அந்தத் தகவல் உண்மை என்று நம்பி பள்ளிக்கு வந்து இரங்கல் கூட்டம் நடத்திப் பள்ளிக்கு விடுமுறை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக வாஜ்பாய் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார். ஆகையால் அதை நம்பிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஓர் ஆசிரியராக இருந்து கொண்டு நம்பகத்தன்மையற்ற செய்தியை வைத்து அவர் இவ்வாறு நடந்து கொண்டது சிறுபிள்ளைத்தனமானது.
இதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.