வெனிஸ் – வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம், 72 -ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனித உரிமைகள் விருதை வென்றுள்ளது.
மனித உரிமைகளை மையப்படுத்திப் பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் பங்கேற்றாலும், ‘விசாரணை’ திரைப்படம் தனித்துவமாக விளங்கியது என அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி அமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்.
இப்படம், சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்படும் ஒருவர் விசாரணையின் போது அனுபவிக்கும் கொடுமைகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.
வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை அவரது கிராஸ்ரூட் நிறுவனம் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
வெனிஸ் பட விழாவில் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி, உலக அரங்கில் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த இன்னொரு வெற்றி எனவும், கடந்த 72 ஆண்டுகளாக நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவொன்றில் பங்கேற்கும் முதல் தமிழ் படமும் இந்தப் படம்தான் எனவும் இப்பட த்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
செப்டம்பர் 24-ஆம் தேதி இப்படத்தை லைக்கா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.