பூமணி என்ற தமிழ் எழுத்தாளரின் “வெக்கை” என்ற நாவலை அற்புதமான திரைப்பட அனுபவமாக உருமாற்றியிருந்தார் வெற்றி மாறன். அவரின் உழைப்புக்கும், அதற்கேற்ப ஒத்துழைத்து தனது நடிப்பில் மெருகேற்றியிருந்த தனுஷின் பங்களிப்புக்கும் உரிய மரியாதைகள் இந்த விருதுகள் மூலம் கிடைத்திருக்கின்றன.
அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கிய தனுஷ் தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.
தனுஷ் இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். ஏற்கனவே, ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றவர் தனுஷ்.
ஆடுகளம், அசுரன் இரண்டு படங்களையும் இயக்குநர் வெற்றிமாறனே இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாயி என்ற இந்தி நடிகருக்கும் வழங்கப்படுகிறது. “போன்ஸ்லே” என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது.
ஆக, 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுகள் இரண்டு நடிகர்களுக்கு இந்த முறை வழங்கப்படுகிறது.