Home One Line P2 திரைவிமர்சனம் : “அசுரன்” – வெற்றி மாறனின் அசுரத்தனமான உழைப்பின் வெற்றி

திரைவிமர்சனம் : “அசுரன்” – வெற்றி மாறனின் அசுரத்தனமான உழைப்பின் வெற்றி

1229
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வழக்கமாக கதாநாயகனுக்கான புகழ்பாடும் ‘ஓபனிங் சாங்’ எனப்படும் மாலை மரியாதையுடனான ஆர்ப்பாட்டமான முதல் பாடல் இல்லை. கதாநாயகியோடு ஓரிரண்டு காதல் பாடல்கள் இல்லை. தனுஷ் கதாநாயகன் என்றாலும் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட சண்டைக் காட்சிகள், அவரது பெருமை கூறும் காட்சிகள் என எதுவும் இல்லை. பாடல்கள் கூட பின்னணியில்தான் பெரும்பாலும் ஒலிக்கின்றன.

எனினும் ‘அசுரன்’ திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நமது கண்கள் திரையிலேயே நிலைகுத்தி என்ன நடக்குமோ என பதிந்திருக்கின்றன. இங்கேதான் படத்தின் ஒட்டு மொத்த வெற்றிக்கும் கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.

அதுவும் ஒரு தமிழ் நாவலின் திரைவடிவம் என்னும்போது நமது பிரமிப்பும், வெற்றி மாறன் மீதான மதிப்பும் இன்னும் பன்மடங்கு கூடுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவரது உழைப்பும், கவனமும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

படத்தின் வெற்றிக்கான மற்றொரு காரணம், தனுஷ். இன்றைய தமிழ் சினிமாவின் முதல் நிலை கதாநாயகர்களில் ஒருவர் என்றாலும், எல்லாவற்றையும் தூக்கி மூட்டை கட்டி தூரத்தில் வைத்து விட்டு, வெற்றிமாறனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டு தனது நடிப்புத் திறனை மட்டுமே நம்பி களமிறங்கி கலக்கியிருக்கிறார் தனுஷ்.

அதே சமயம், முக்கியமான கட்டங்களில் தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற ஆக்ரோஷமாக ஆயுதங்களுடன் இறங்கி அடிக்கும் காட்சிகளில் தனுஷ் மாஸ் ஹீரோவாக “ஸ்லோ மோஷனில்” நுழைந்து திரையரங்கையே கைத்தட்டல்களால் தெறிக்க வைக்கிறார்.

படத்தின் முழுவெற்றிக்கும் வெற்றி மாறன் – தனுஷ் இருவர் மட்டுமே காரணகர்த்தாக்களாக உயர்ந்து நிற்கின்றனர்.

கதை-திரைக்கதை

படத்தின் மூலக் கதை பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலின் கதைதான். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அந்த நாவலை துணிச்சலுடன் படமாக்க முன்வந்திருப்பதோடு, அந்தக் கதாபாத்திரங்களின் ஈரத்தையும், வீரத்தையும், உணர்வுகளையும் அப்படியே திரைமொழியின் வழியாக இரசிகனுக்குக் கடத்தியிருப்பதில் வெற்றி மாறன் தனித்து நிற்கிறார். இந்த நாவலின் கதையை இரசிக்கும்படியான படமாக உருமாற்றுவது அவ்வளவு சுலபமில்லை என்பதைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்வர்.

திரைக்கதை உருவாக்கத்தில் வெற்றி மாறனுடன் மணிமாறனும் இணைந்திருக்கிறார். வசனங்கள் எழுதுவதில் சுகா இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

தனது பதின்ம வயது மகனுடன் காவல் துறையினருக்கு பயந்து இருளில் காட்டுக்குள் ஓடி ஒளியும் தனுஷ் ஒருபுறம், அதேபோன்று தனது அண்ணனுடனும் மகளுடனும், தன்னைத் தற்காத்துக் கொள்ள ஊரிலிருந்து வெளியேறும் தனுஷின் மனைவி மஞ்சுவாரியர் இன்னொரு புறம் எனத் தொடங்குகிறது கதை. இவர்களைத் தேடிக் கொலை செய்ய ஒரு கும்பல் அலைகிறது.

ஏன் இந்தப் பிரச்சனை என்பதை தனுஷின் மகனின் பார்வையிலிருந்து சொல்லத் தொடங்குகிறார்கள். மகன்களுக்காக ஊர்மக்களின் கால்களின் விழும் அளவுக்கு பணிந்துபோகும் சிவசாமியாக வரும் தனுஷ், இடைவேளைக்கு முன்னர் மகனைக் காப்பாற்றுவதற்காக விஸ்வரூபம் எடுத்து அசுரனாக ஆக்ரோஷமான தாக்குதல் நடத்துகிறார். இடைவேளைக்குப்  பின்னர் அவரது இளமைக் கால கதை காட்டப்படுகிறது.

மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் திரைக்கதை தனுஷ் தனது பிரச்சனையை சோகமும் இழப்புமாக எவ்வாறு எதிர்கொண்டு பிரச்சனையிலிருந்து வெளியே வருகிறார் என்பதாக முடிகிறது.

ஆதிக்க சாதிகளின் அடக்குமுறை – சிறு விவசாயிகளின் பிரச்சனைகள்

ஒரு காட்சியைப் படமாக்கும் முன் விளக்குகிறார் இயக்குநர் வெற்றிமாறன்

இந்தக் கதையினூடே சிறிய நிலங்களை வைத்திருப்பவர்களின் பிரச்சனைகள், 1960-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் புரையோடிக் கிடந்த ஆதிக்க சாதிகளின் அடக்குமுறை, வன்முறை, பணபலம் படைத்தவர்களுக்கு ஆதரவாக காவல் துறையினரும் அதிகாரிகளும் அடிபணிந்து கிடப்பது, பணபலத்தை எதிர்த்துப் போராட முடியாமல் தவிக்கும் ஏழைகளின் அவலம், செருப்பு போட்டு நடப்பதற்குக் கூட ஒரு பதின்ம வயதுப் பெண்ணை ஊர் முன்னால் அடிப்பது என சமூகத்தின் பல அவலங்களை மண்டையில் ஓங்கி அடிப்பதுபோல் புகுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பெரிய நிலச்சுவான்தார்களுக்கு மத்தியில் சிறிய நிலங்களை வைத்திருக்கும் விவசாயப் பெருமக்கள் சந்திக்கும் நெருக்குதல்கள், அழுத்தங்கள், பணபலத்தை எதிர்த்துப் போராட முடியாமல் அவர்கள் எதிர்கொள்ளும் தவிப்புகள் என கதைக்குரிய முக்கிய அம்சங்களை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரச்சனைகள் என்று வந்தவுடன் அழுது புலம்பிக் கொண்டிருக்காமல், தனுஷின் ஒட்டுமொத்தக் குடும்பமுமே எதிர்கொண்டு போராடத் துணிவது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படுவதும் வித்தியாசமான அணுகுமுறை.

படத்தின் பெரும் பலம் – நடிப்பு

“எனது கதையைக் கெடுத்து விட்டார்கள்” என வழக்கமாகக் கேட்கும் தமிழ் எழுத்தாளர்களின் குரல்களுக்கு மத்தியில், எனது நாவலின் தாக்கம் கெடாமல் படமாக்கியிருக்கிறார் என்ற வெற்றி மாறனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் பூமணி. நாவலின் தன்மை கெடாமல், சினிமாவுக்கான சமரசங்கள் எதையும் செய்யாமல் படத்தை எடுத்திருப்பது படத்தின் தரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.

நடிகர்களின் நடிப்புதான் படத்தின் மிகப் பெரிய பலம். முழங்கைக்குக் கீழே தொங்கும் தொளதொள சட்டையுடன், ஆங்காங்கு நரைத்த தாடி, தலைமுடியுடன், விவசாயத்தை அடையாளப்படுத்தும் பச்சை முண்டாசுடன் சிவசாமியாகவே மாறியிருக்கிறார் தனுஷ். குடும்பத்தைக் காப்பாற்ற அவர் நடத்தும் போராட்டம் நம்மைக் கண்கலங்க வைக்கிறது.

அவருக்கு மனைவியாக வரும் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அனுபவமிக்க சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கணவன் மீதும், குழந்தைகள் மீதும் பாசம் காட்டுவதிலும், தனது நிலத்தில் தகராறு என வரும்போது எதிராளியின் கழுத்தில் கூரிய கத்தியை வைக்கும் வீரத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தனுஷின் மைத்துனராக வரும் பசுபதி, உதவும் வழக்கறிஞராக வரும் பிரகாஷ் ராஜ், வில்லன்களாக வரும் நரேன், இயக்குநர் வெங்கடேஷ், ஆகியோரும் அனுபவமிக்க நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

காதல், வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் போலீஸ் இன்ஸ்பெக்டராக நமது வெறுப்பை சம்பாதிக்கும் அளவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

மற்ற துணை நடிகர்கள், தனுஷின் மகன்களாக வருபவர்களின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

இசையும் மற்ற அம்சங்களும்…

தனுஷ் – ஜிவி பிரகாஷ்

நிறைய நடித்து வருவதால் ஜி.வி.பிரகாஷ் இசையை மறந்திருப்பார் என்று பார்த்தால், பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். பாடல்களுக்கு அதிக வாய்ப்பில்லாத நிலையில், பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது திறனைக் காட்டியிருக்கிறார். தனுஷ் ஆயுதங்களோடு தோன்றும் காட்சியிலும், கதாபாத்திரங்களின் பரபரப்பைக் காட்டும் இடங்களிலும் ஜிவியின் இசை படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

வழக்கமாக வெற்றிமாறன்-தனுஷ் படங்களின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இதிலும் பணியாற்றியிருக்கிறார். ஓரிரு காட்சியிலும் நடித்திருக்கிறார். இரவுக்காட்சிகளும், காட்டு மத்தியில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்துகின்றன.

படத்தின் பலவீனமாக எதையும் பார்க்க முடியவில்லை. இரத்தம் சிதறும் வன்முறைகள் அதிகம்தான்! ஆனால் கதையின் போக்கு அதனை நியாயப்படுத்துகிறது. சில இடங்களில் அவனை வெட்டுடா என நமக்கே குரல் கொடுக்கத் தோன்றுகிறது.

இறுதிக் காட்சியில், மகனுக்கு தனுஷ் கல்வி குறித்து வழங்கும் அறிவுரை அம்பேத்காரை நினைவுபடுத்தும் நெத்தியடி வசனம். படத்திற்கு மட்டுமல்ல, மலேசியாவில் கூட வன்முறையை நாடும் இளைஞர்களுக்கு ஏற்ற நல்லுரை. “அதிகாரத்திற்கு வந்ததும் அவர்கள் செய்ததை நீயும் செய்யாதே” என்று சொல்வது நெகிழ வைக்கிறது.

படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்ததும், “வெக்கை” நாவலை ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

அதுதான் ஓர் இயக்குநராக வெற்றிமாறன் அடைந்திருக்கும் வெற்றி.

எழுத்தாளராக பூமணிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்!

பார்க்க வேண்டிய படம்!

-இரா.முத்தரசன்