புதுடில்லி – மூன்று நாள் அரசுமுறைச் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை இன்று பிற்பகல் 11.30 மணியளவில் சந்தித்துப் பேசினார்.
டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீதான ஐநா விசாரணை முதலிய முக்கிய விசயங்கள் பற்றி இருவரும் விவாதித்தனர்.
மேலும், இந்தியா- இலங்கை இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை: 1.வவுனியாவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு 200 படுக்கைகள் அனுப்புதல்
2. இலங்கையில் அவசரக் கால மருத்துவச் சேவையை இந்தியா ஏற்படுத்துதல்
3.சார்க் செயற்கைகோள் அனுப்புவதில் இந்தியா- இலங்கை இணைந்து செயல்படுதல்
4.இலங்கையில் சிறிய வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துவது- என்பனவாகும்.
அதன் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:- ”இந்தியா- இலங்கை உறவில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாகும். தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ரனில் விக்ரமசிங்கே இந்தியாவைத் தேர்வு செய்ததற்கு நன்றி.
ரணில் விக்ரமசிங்கே உறவால் இந்தியா- இலங்கை உறவு மேம்பட்டுள்ளது. இலங்கையில் முதலீடு செய்ய இந்தியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
ஆழ்டலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர் சங்கங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது. “இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம். பழைய காயங்களை உற்று நோக்கும் வேளையில் எதிர்காலத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம். தீவிரவாத எதிர்ப்பு, கடலோரப் பாதுகாப்பு போன்ற விசயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்.
ஜெனிவா மாநாடு மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து விவாதித்தோம். இனி இலங்கையில் அனைத்துத் ததரப்பினரும் சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்கப்படும். சு
ற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் இந்தியாவுடன் பேசி உள்ளேன். மீனவர்கள் பிரச்சினைக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.