கோலாலம்பூர் – நாடெங்கும் பரவியுள்ள அதிகப்படியான புகைமூட்டம், சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல, மலேசியப் பிரதமரின் முக்கியப் பணிகளில் கூட இடையூறை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணை மறைக்கும் அளவிலான கடுமையான புகைமூட்டத்தால், நிகழ்ச்சி ஒன்றிற்கு ஹெலிகாப்டரில் போக வேண்டிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், காரில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கூச்சிங்கில் இருந்து 107 கிலோமீட்டரில் உள்ள செமாதான் என்ற இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 2.20 மணியளவில், தனது மனைவி ரோஸ்மா மான்சோருடன் கூச்சிங் விமான நிலையத்தை அடைந்தார் நஜிப்.
ஆனால் வானில் ஏற்பட்டிருக்கும் கடுமையான புகைமூட்டம் காரணமாக செமாதானுக்கு ஹெலிகாப்டரில் போக இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலை வழியாக 90 நிமிடங்கள் பயணம் செய்து இடத்தை அடைந்துள்ளார் நஜிப்.