கோலாலம்பூர் – துணைக்கோள தொலைக்காட்சி சேவையை நாட்டில் வழங்கி வரும் அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro) 31 ஜனவரி 2016 முடிவடையும் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் நிதி அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதன் வருவாய் 4% வரைக்கும் உயர்ந்து 2.7 பில்லியன் மலேசிய ரிங்கிட்டை எட்டியுள்ள நிலையில், வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) 7% உயர்ந்து, 962 மில்லியன் மலேசிய ரிங்கிட்டும், வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI) 15% கூடுதலாகி, 306 மில்லியன் ரிங்கிட் மலேசிய ரிங்கிட்டும், ரொக்கக் கையிருப்பு பணப்புழக்கம் (Free Cash flow) 589 மில்லியன் ரிங்கிட்டும் ஆக பதிவு செய்துள்ளது.
அஸ்ட்ரோ தலைவர் துன் சாக்கி அஸ்மி…..
அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறுகையில் “சவால்மிக்க வாடிக்கையாளர்கள் முறையீடுகளுக்கிடையே, தங்களுடைய நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பங்குதாரர்களுக்குத் தொடர்ச்சியான இலாப ஈவை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இலாபம் ஈட்டும் வியாபாரத் திட்டத்தை முறையாகக் கையாண்டுள்ளனர்” என்றார்.
அதே வேளையில், இரண்டாம் இடைக்கால இலாப ஈவு, பங்குக்கு 2.75 சென் வீதம் உயர்ந்துள்ளது என்பதை அறிவிப்பதில் அஸ்ட்ரோ குழுவினர் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார். இவை கடந்த ஆண்டு இலாப ஈவு பங்குடன் ஒப்பிடுகையில் 22% கூடுதல் உயர்வு கண்டுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி ரோஹானா…
அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் (படம்) கூறுகையில், “வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து பல்வகைப்பட்ட தளங்களின் வாயிலாக தரமான உள்ளடக்கங்கள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அனுபவங்களைத் தொடர்ந்து வழங்கின்றோம். கடந்த முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டில் 426 ஆயிரம் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களும், இதற்கு அடித்தளமாக விளங்கிய ‘என்ஜோய்’ 58% உயர்ந்து 1,071 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. ஆகவே, முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டில் மலேசியாவில் தொலைக்காட்சி வைத்திருப்போரின் எண்ணிக்கை 65% உயர்ந்துள்ளது.
கடந்த 2015 நிதியாண்டின் முதல் பாதியில் தொலைக்காட்சி வைத்திருப்போரின் எண்ணிக்கை 60 சதவீதமாக மட்டும் இருந்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்கப்பட்ட பெட்டி மற்றும் ‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ’ எனப்படும் நடமாடும் தொலைக்காட்சி சேவையைப் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை 181 ஆயிரத்திலிருந்து 500 ஆயிரமாக உயர்த்த தாங்கள் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக ரோஹானா மேலும் கூறினார்.
தங்களுடைய அனைத்துலக ரீதியான உள்ளடக்கத்தை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் தொடர்கள், நேரலை, சமூக நிகழ்ச்சிகள் போன்ற தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவோம் என்றார்.
அதுமட்டுமின்றி, சிறந்த அனுபவத்தையும் பயன்படுத்துவர்களின் பங்கு மேலும் அதிகரிக்கும் வகையில் ‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. செல்பேசியின் வாயிலாக நிகழ்ச்சிகளைப் பதிவிறக்கம் செய்து இதன்மூலம் கண்டு களிக்கலாம்.
தற்போது, இந்தச் செயலியை 31%, அதாவது 1.6 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். வாராந்திர நாட்களில் 140 நிமிடத்தைத் தாண்டியும் இதன் மூலம் இரசிகர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றார்கள்.
விளம்பர வருமானங்களும் உயர்வு
மேலும், விளம்பரத்தின் மூலமான வருமானம் 5% உயர்ந்து 305 மில்லியன் மலேசிய ரிங்கிட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அஸ்ட்ரோவின் ‘டிவி எடெக்ஸ்’ (TV Adex-தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானம்) மற்றும் ‘ரெடெக்ஸ்’- (Radex-வானொலி மூலமான விளம்பர வருமானம்) பங்கு விகிதாச்சாரம் முறையே 35% மற்றும் 61% அதிகரித்துள்ளன.
விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக வாங்குவோரின் ஒத்துழைப்பு ‘டிவி எடெக்ஸ்’ எனப்படும் தொலைக்காட்சி மூலமான விளம்பர வருமானம் உயர்வதற்கு பெரும் பங்களித்துள்ளது. அஸ்ட்ரோவின் இணைய வியாபாரம் எனப்படும் ‘கோ ஷோப்’ (Go Shop) 75 மில்லியன் மலேசிய ரிங்கிட் வருவாயைப் பெற்றுள்ளது. அதே வேளையில், நான்காவது இடைக்கால நிதியாண்டில் வாடிக்கையாளர்கள் சீன மொழியில் ‘கோ ஷோப்’ அலைவரிசையை எதிர்பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் பாரம்பரிய மற்றும் அதிநவீன ஊடகங்களின் வாயிலாகப் பயன் பெறுவதற்கு அஸ்ட்ரோ மூலம், அதிகம் கவரக்கூடிய மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்கிறோம்.
எடுத்துக்காட்டுக்கு, பிரபலமான விருது வழங்கும் ‘Anugerah MeleTOP Era 2015’ என்ற நிகழ்ச்சி 360° அனுபவத்தைத் தொலைக்காட்சி, வானொலி, இலக்கவியல் (டிஜிட்டல்) மற்றும் நேரடியாகவும் ஏற்படுத்தித் தந்துள்ளது மட்டுமின்றி, இந்நிகழ்ச்சியை 1.9 மில்லியன் நேயர்கள் கண்டு களித்து உள்ளனர் என்றும் ரோஹானா தெரிவித்துள்ளார்.
புதிய அலைவரிசைகளும் அறிமுகம்
அஸ்ட்ரோ HGTV HD, Nat Geo People HD, Star Chinese என்ற அலைவரிசைகளையும் மற்றும் 4 புதிய விளையாட்டு (WWE Network, Setanta Sports HD, Astro Cricket HD and Golf HD) அலைவரிசைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல் முறையாக, அஸ்ட்ரோ அனைத்துலக ‘டோதா சாம்பியன்ஷிப்’ 2015 போட்டியின் நேரலையை தொலைக்காட்சி மற்றும் ‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ’ வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. 1.5 மில்லியன் நேயர்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டுக் களித்து உள்ளனர்.
டத்தோ ரோஹானா தொடர்ந்து கூறுகையில், தங்களுடைய வளர்ச்சியை மேலும் உயர்த்திக் கொள்ளுவதற்கு அனைத்து செயல் திட்டங்களும் தங்களின் செலவுகளை மையப்படுத்தி எடுக்கப்படும். பொருத்தமான கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்குவதே தங்களுடைய முன்னுரிமை என்றார்.
அதுமட்டுமின்றி, சந்தாதாரர்களின் தளம், விளம்பரம் மற்றும் மின் வணிகம் போன்ற சவால்மிக்க இன்றைய சூழலில் தொடர்ந்து வளர்ச்சி காணுவது அஸ்ட்ரோவின் நோக்கமாகும்.
31 ஜனவரி 2016 ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் அஸ்ட்ரோவின் சிறப்பு முடிவுகள் பின்வருமாறு:
- வருவாய் உயர்வு 4%, 2.7 பில்லியன் ரிங்கிட்
- வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) உயர்வு 7%, 962 மில்லியன் ரிங்கிட்
- வரிக்கு பிந்திய இலாபம் (PATAMI) உயர்வு 15%, 306 மில்லியன் ரிங்கிட்
- பணப்புழக்கம் (FCF) 589 மில்லியன் ரிங்கிட்
- இரண்டாம் இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 2.75 சென் வீதம், கடந்த ஆண்டைப் ஒப்பிடுகையில் 22% உயர்வு