சென்னை – இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக விசாரணைக்குழு தேவை. இதற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். வழக்கமாக அரசின் எத்தகைய அறிவிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளும் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. பாராட்ட வேண்டிய கட்டாயத்தினாலோ என்னவோ, திமுக தலைவர் கருணாநிதியும் வழக்கம் போல் தனது சொல்லாடல் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஜெயலலிதா தினமும், சட்டசபைக்கு வந்து, 110 விதியின் கீழ், ஒரு அறிக்கையை படித்துவிட்டு செல்வதை, வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது மனசாட்சியே, அவரை கேள்வி கேட்ட காரணத்தாலோ என்னவோ, 16-ம் தேதி, அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை முன் மொழிந்திருக்கிறார்.”
“அந்த தீர்மானத்தில், இலங்கையில் போர் குற்றங்கள் நிகழ்த்தியவர்கள் மீது, அனைத்துலக விசாரணை நடத்தும் வகையிலான தீர்மானத்தை, இந்தியாவே ஐநா சபையில், மனித உரிமைக்குழு முன், கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.”
“இதை ஏற்கனவே, கடந்த மாதம் 29-ம் தேதி, ‘கேள்வி- பதில்’ பகுதியில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த கருத்தே சட்டசபை தீர்மானத்திலும் எதிரொலித்துள்ளது என்ற வகையில், திமுக சார்பில், அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். இலங்கையில் நடந்த, போர் குற்றங்களை விசாரிக்க, சுதந்திரமான, நம்பகமான, அனைத்துலக விசாரணைக்கு, இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை, நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.